வாழ்வியல் செய்திகள்


முள்ளிவாய்க்கால் - மே,18 2009

May 17, 2019


 

 

 

 

 

 

- "முள்ளிவாய்க்கால் ஒரு "சாட்சியமில்லாத இனழிப்பு"-

 

 

முள்ளிவாய்க்காலில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய மனிதப் பேரவலம் தமிழ் மக்கள் வசிக்கும் நிலமெல்லாம் இன்னும் மறக்கமுடியாத ஒரு துன்பியல் நிகழ்வாக மனங்களில் படிந்திருக்கின்றது

முள்ளிவாய்க்கால் எனும் பெயரை அறியாத தமிழன் இல்லை என்று கூறுமளவுக்கு, ஒரு இனத்தின் மீதான அவலம் நிகழ்த்தப்பட்ட இடம். முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகிய பிரதேசம், இன்று சர்வதேச அளவில் அறியப்பட்ட பகுதிதான் முள்ளிவாய்க்கால்

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அளவில் ஏற்பட்ட எம் இனிய உறவுகளின் அநியாயமான உயிரிழப்புகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளே இம்மாதம் வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாகும். அந்த உயிரிழப்புக்கள் நடந்து பத்து வருடங்கள் ஆகின்றன. அன்று குழந்தைகளாகவிருந்த இளம் சிறார்கள் இன்று இளைஞர் யுவதிகளாக உருமாற்றம் பெறும் நிலையில் உள்ளார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கூட அன்று நடந்த பயங்கரமான நிகழ்வுகள் ஓரளவு வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.

 

'சாட்சியமில்லாத இனழிப்பு'

 

சாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால். வெளியாரின் உள்ளீடுகள் தடுக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு, போர் நடைமுறைகளுக்கு முரண்பட்ட விதத்தில் போராயுதங்கள் பாவிக்கப்பட்டு மக்களை அழித்தொழித்த சமரே முள்ளிவாய்க்கால். அப்பாவிப் பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், வயோதிபர்களின் உயிர்களைக் காரணமின்றிக் காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால். வட கிழக்கு மாகாண மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப்பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எம் மக்களின் வரலாற்றில் ஒரு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய தினமாகும்.

 

'மூடிமறைக்கப்பட்ட உண்மைகள்'

 

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை. நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப்பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் எம் மக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளார்கள்.

 

'கால நீட்சியில் செல்லும் சர்வதேச விசாரணை'

 

 

அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி இலங்கை அரசுக்கு அளித்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக் கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தவர்களின் எதிர்பார்ப்பு. இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தெரியவில்லை.  வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது.

 

'குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்'

 

சிலர் இவ்வாறான பொறிமுறையை நாங்கள் வேண்டி நிற்பதன் நோக்கம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்று நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்று கூறுகின்றார்கள். இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள்: இது தவறு. இப்பேற்பட்ட விசாரணை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க உதவும்;. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பது சம்பந்தமான விடயங்கள் இவ்வாறான விசாரணைகள் வெளிக்கொண்டுவருவன. அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவை தமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும். தமிழர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை இதுவரைகாலமும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த காரணங்களை எடுத்தியம்ப அவ்வாறான விசாரணைகள் வழிவகுப்பன. உண்மையான அதிகாரப்பரவலாக்கம் விரைந்து செயற்படவேண்டியதொன்று என்பதை அனைவரையும் அறிந்து கொள்ளச் செய்வன.

 

'ஜனநாயக வழிபோராட்டத்தில் மக்கள்'

 

இன்று ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள். அடிதடி எடுத்தே ஒரு விடயத்திற்கு தீர்வு காணலாம் என்ற எண்ணம் போய் எம்மை நாமே வருத்தி அகிம்சை முறையில் போராடி வெற்றிகள் காணமுடியுமென்பதை எமது மக்கள் எடுத்துக்காட்டி வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் அந்தவகையிலே ஒருவிதப் போராட்டந் தான். அநியாயமாக கொலை செய்யப்பட்ட எம் மக்களை நாம் ஒன்றிணைந்து நினைவு கொள்வதன் மூலம் மக்களின் ஒரு பாரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம். இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதார கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் மனதால் ஒன்று சேர்க்க உதவுகின்றது. எம் மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும்.

 

'அமைதியான நினைவேந்தலுக்கு அழைப்பு'

 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் எதிர்வரும் 18ம் திகதி  முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்திருக்கின்றது.

கடந்த ஆண்டைப்போல் பாரிய அளவில் முன்னெடுக்க ஏற்பாடாகிய இந்த 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களினால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு நிகழ்வை அமைதியான முறையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

 

'அனைவரும் கலந்துகொள்வோம்'

 

 

இம் மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் அமைதியான நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, இன பேதமின்றி, வர்க்க பேதமின்றி, ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி எமது மக்கள் சேர்ந்து பங்குபற்ற வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் அத்துடன் நாட்டின் ஏனைய இடங்களில் வசிக்கும் தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழ்மக்களும் ஒன்று சேர்ந்து தமது துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாக அதை மாற்றி தமிழ்மக்களின் ஜனநாயக வழிபோராட்டத்தை மென்மேலும் கொண்டுசெல்ல அனைவரும் வழிசமைத்துக்கொடுக்க வேண்டும்.

 

இணையம் செய்தி தளத்திற்காக
- தமிழ் -

மே, 17 2019