இலங்கை செய்திகள்


மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி மரணம்

Sep 17, 2023


பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை ஒன்று விழுந்ததால் அம்மாணவி உயிரிழந்துள்ளார் என பூண்டுலோய பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றபோது மரக்கிளை ஒன்று அவரது தலையில் விழுந்துள்ளது.

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்கரபத்தனை பம்பரகெலே அபகன்லி தோட்டத்தில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அக்கரப்பத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.