இலங்கை செய்திகள்


போராட்டக்காரர்களை அமெரிக்கா பாதுகாத்தது

Jun 23, 2022


காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அனைவரையும் கைதுசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்த போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேரடியாக தலையிட்டு அதனை தடுத்ததாக  சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

ஒருமுறை காலி முகத்திடலில் போராடிக்கொண்டிருந்த 200,  300 பேரை ஒரேடியாக கைது செய்து அழைத்துச் செல்வதற்கு அதிகளவான பொலிஸ் வாகனங்கள் தயார் நிலையில் காலிமுகத்திடலில் தரித்து இருந்தன.

எனினும், அவ்வாறு செய்யாது அந்த வாகனங்கள் பின்னர் திரும்பிச் சென்று விட்டன. இது தொடர்பில் நான் ஆராய்ந்து பார்த்தேன். அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவருக்கு அமெரிக்கத் தூதுவர் தொலைபேசியில் அழைத்து, காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களை கைது செய்யப் போகிறீர்களா? என வினவியிருக்கிறார்.

எனினும், இதனை அறிந்திருக்காத அந்த அமைச்சர், ” இல்லை அவ்வாறு எதுவும் நடப்பதாக எனக்கு தெரியாது” என பதிலளித்திருக்கிறார். இதன்போது பதிலளித்த அமெரிக்கத் தூதுவர், காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களை கைது செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகள் இலங்கைக்கு கிடைக்காது என அந்த அமைச்சரிடம் கூறியதாகவும் விமல் வீரவன்ச சபையில் குறிப்பிட்டார்.