இலங்கை செய்திகள்


போக்குவரத்து பொலிஸார் திலீபனின் ஊர்தி பவனிக்கு இடையூறு!

Sep 22, 2022


வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற தியாக தீபம் திலீபன் ஊர்தி பவனிக்கு போக்குவரத்து பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகின்றோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து யாழ் நல்லூர் நோக்கி பயணிக்கின்றது.

5 ஆம் மற்றும் ஆறாம் நாட்களான 19 ஆம் 20 ஆம் திகதிகளில் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவின் பல்வேறு கிராமங்களுக்கு சென்றிருந்தது. இதன்போது மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகனம் கண்டி வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணித்த போது கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் குறித்த ஊர்தி பவனிக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்போது வாகனத்தை வழிமறித்து, ஊர்தி பவனி தொடர்பான விளக்கங்களை கேட்டதுடன், அதில் பயணித்தவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்த பின்னர் குறித்த வீதிகளில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.