Mar 17, 2023
கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதி பலமாக காணப்பட்டதாகவும் தற்போது அதன் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, பொருளாதாரத்தை பலப்படுத்தாமல் ரூபாயை பலப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இம்மாதத்தின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் திறன் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
2025 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதிக்கு அந்த பதவியில் இருக்க முடியும் என்பதால், தேவைப்பட்டால் புதிய நாடாளுமன்றத்தில் இருந்து சர்வகட்சி அரசாங்கத்தை அழைக்க முடியும் என்றும் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.