இலங்கை செய்திகள்


பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

Sep 22, 2022


பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (21) மாலை, கெட்டம்பே இரண்டாம் ராஜசிங்க மாவத்தை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள  மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.

24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16ஆம் திகதி முதல் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் அவரைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவரது சடலம் மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், மாணவனின் பெற்றோர் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது,  சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  மாணவனின் சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.