வாழ்வியல் செய்திகள்


பெருந்தொற்றுகால முடக்கநிலையும் ஓட்டிசமும்

Apr 02, 2021


'ஓட்டிசம்’ என்பது மூளைவிருத்திநிலையோடு சம்பந்தப்பட்ட, வாழ்நாள் பூராகவும் நீடிக்கக்கூடிய பிரச்சனையாகும். இது உலக அளவில் அதிகரித்து வருகிறது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் 'ஓட்டிசத்தால்' பாதிக்கப்பட்டவர்களிற்கான சேவைகள் அடிமட்டத்திலேயே உள்ளன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 'ஓட்டிசத்தால்' பாதிக்கப்பட்டவர்களிற்கான சுகாதார சேவைகள், கல்வி, சமூக சேவைகள் என்பன நல்ல தரத்தில் உள்ளன. இந்தநிலையில் இலங்கையில் 'ஓட்டிசத்தால்' பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களிற்குரிய பராமரிப்பு, சிகிச்சையளிப்பு நிலையங்களை விட வீடுகளிலேயே கூடுதலாக உள்ளர். 'ஓட்டிசத்தால்' பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் இயற்கையாகவே மொழியாற்றல், மட்டுப்படுத்தப்பட்ட ஆர்வம், ஈடுபாடு, மீள மீள செய்யும் புறழ்வு நடத்தைகள், சமூக நடத்தைகள், சமூக இடைத்தொடர்புகள் குறைவாக காணப்படுதல் அத்துடன் கற்றல் இடர்பாடுகளும் இவர்களில் சேர்ந்தே காணப்படும். இவை பிள்ளைக்கு, பிள்ளை வேறுபடலாம். இவ்வாறான பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களில் பெற்றோர், இவர்களை பராமரிப்பதில் அதிகம் களைத்து சலித்து போவது வழமையானதே.

அர்பணிப்பு, சகிப்புத்தன்மை கொண்ட பெற்றோர்கள் உள்ள குடும்பங்களில் பெற்றோர் சரிசமாக தம்மை தயார்படுத்தி மற்றைய பிள்ளைகளுடன் 'தீரனியர்களையும்' வளர்த்துக் கொண்டுபோவது பாராட்டுக்குரியது. ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தீரனிய குழந்தைகளில் மட்டுப்படுத்தப்பட்ட ஆர்வம், ஈடுபாடு காணப்படுவதால் அவர்களது நாளாந்த செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும் போது அதற்கு அவர்களால் இசைந்து போக முடியாமல் போகும். அப்போது அவர்கள் அதிக கோபமடையும் நிலைக்கு செல்லலாம். இதனால் சாதாரண குடும்ப சமநிலை பாதிக்கப்படுவதோடு சாதாரண ஏனைய பிள்ளைகளின் நலனிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்த சூழ்நிலையில் 'கோவிட் -19' பெருந்தொற்றும், அதனால் ஏற்பட்ட முடக்க நிலைமைகளும், தீரனியர்களை கொண்ட குடும்பங்களில் பெரும் சவால்களை ஏற்படுத்தியது உண்மையே. இந்த சூழ்நிலை சாதாரண அச்சுறுத்தலோடு, குடும்பங்களின் சமநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சவால்கள் தீரனியர்களின் நலனில் நேர்முக மாற்றங்களை ஏற்படுத்த விளைந்ததோடு, சில கசப்பான அனுபவங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

முடக்கல் நிலை என்பது, ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தீரனியர்களின் நாளாந்த செயற்பாடுகள், வீட்டுக்கு புறம்பான வெளிப்புற செயற்பாடுகள் குறிப்பாக விசேட பாடசாலைக்குச் செல்லுதல், பொழுதுபோக்கு செயற்பாடுகளில் ஈடுபடுதல், தமது மகிழ்ச்சியான/சந்தோஷமான வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன தடைப்பட்டுள்ளன. சாதாரண பிள்ளைகள் போல் இந்த முடக்கல் காலத்தில் தீரனியர்களில் சாதாரண நாளாந்த செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது என்பது மிகவும் சவாலானதே. இந்த புதிய சூழலிற்கு தீரனியர்கள் இசைவாக்கம் அடைவது என்பதுவும், புது நடைமுறைகளை செயற்படுத்தவது என்பதும், உடல், உள ரீதியாக நிகழக்கூடியதாகவோ, நிகழ முடியாததாகவோ அமையலாம். உதாரணமாக 'யு டீயூப்' கேட்டபது, பார்ப்பது என்பன குறிப்பிட்ட நேரத்திற்கு சரியானது. ஆனால் கூடிய நேரம் இதனுடன் செலவு செய்தால், பயனுடைய அவர்களது நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்படுவது ஆரோக்கியமானது அல்ல. இதேபோல் தீரனிய குழந்தைகள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபவது பாதிக்கப்படும் போது, அவர்கள் பயனற்ற நடத்தைகளை வெளிக்கொணரலாம். அதாவது ஒரு பொருளை சுழற்றுவதாகவோ, நிழலை தொடர்ந்து பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் இருப்பதாகவோ அமையலாம்.

 

ஒரு விசேட தேவையுள்ள பாடசாலையிலோ வீட்டிலோ கற்றுக்கொண்ட நன்நடத்தைகள் எல்லாம் இக்காலப்பகுதியில் தொடர முடியாமல் விடுபட்டு, புறழ்வு நடத்தைகள் ஆரம்பிக்கலாம். இதற்கு மேலாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விருப்பமான சில உணவுகளை மட்டுமே தமது தீரனிய குழந்தைகள் உண்ணுவார்கள், அவர்களிற்கு ஏனைய உணவுகள் பிடிக்காது என்பார்கள். பிள்ளைக்கு விருப்பமான உணவு என்பது ஆரோக்கியமான உணவாக அமையாது. அவர்கள் கூடுதலாக 'பிஸ்கட், கேக், சொக்லேட்' என்பவற்றையே விரும்புவார்கள். அதுவும் குறிப்பிட்ட வகையான தயாரிப்புகளிற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டில் மாவினால் செய்யும் உணவுகளும் அவர்களிற்கு விரும்பமாக அமையலாம். தீரனியர்கள் கூடுதலாக இனிப்பு, மாவால் செய்யப்பட்ட உணவுகளிற்கு முன்னுரிமை கொடுப்பதுடன், வீட்டிற்கு வெளியிலான உடற்பயிற்சிகளும் குறைவாக இருப்பதனால் இவை புதிய சுகாதார பிரச்சனைகளையும் தோற்றுவிக்கலாம். குறிப்பாக உடற்பருமன் அதிகரித்தால் மலச்சிக்கல் என்பவற்றை குறிப்பிடலாம். அத்துடன் குறிப்பிட்ட உற்பத்திகளிற்கே தீரனியர்கள் முன்னுரிமை கொடுப்பதால், முடக்கநிலை காலத்தில் இவற்றை பெற்றுக் கொடுப்பதுவும் பெற்றோர்களிற்கு சவாலானதே. இதனால் தீரனியர்கள் கோபப்படுதல், ஆத்திரப்படுதல் போன்ற உணர்வு ரீதியான, நடத்தை ரீதியான மாற்றங்களையும் காட்டுவார்கள். தீரனிய பிள்ளைகளை கொண்ட பெற்றோர்கள், இவர்களின் தேவைகளை நிறைவேற்ற கட்டாயமாக வீட்டுக்கு வெளியில் சென்றுவர வேண்டும். இது நாடு சாதாரண நிலமையில் உள்ளபோதும் அசாதாரண நிலமையில் உள்ள போதும் நடக்கவே வேண்டும். சாதாரணமாக ஒவ்வொரு நாளும் தீரனியர்கள் தொலைக்காட்சி பார்க்க, இசைகள் கேட்க, வாசித்தல் போன்ற செயல்களில் இரவு, பகலாக ஈடுபடுவது கஸ்டமாகவே அமையும். இது சாதாரண பிள்ளைகளிற்கும் தொடர்ச்சியாக செய்வது சவாலகவே அமையும். குறிப்பாக பொது முடக்க காலங்களில் தீரனிய பிள்ளைகளைக் கொண்ட தொழில்புரியும் பெற்றோர்கள் வீட்டில் இருப்பதிலும், வேலை செய்யும் இடத்தில் கூடுதலாக ஆசுவாமாகவே இருப்பார்கள். வீட்டில் உள்ளபோதுதங்கள் சாதாரண பிள்ளைகளுடன் தீரனியர்களையும், சரிசமாக கவனித்துக் கொள்வது என்பதுவும் அதற்காக காலத்தை பெற்றுக் கொள்ளவும், மற்றைய பிள்ளைகளுடன் கூடிகுலாவும் போதுமான நேரம் கிடைப்பது சவாலானது.

 

'கோவிட் - 19' வைரஸ் ஏற்படுத்திய பெருந்தொற்று, அதன் பின்னான சூழ்நிலை என்பன தீரனியர்கள் கொண்ட குடும்பங்களின் பெற்றோர்களிற்கு அதிக கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. துர்அதிஸ்ட வசமாக பெற்றோரில் ஒருவர் 'கோவிட் - 19' வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிவிட்டால் அவர் பதினைந்து நாட்கள் சுயதனிமைப்படுத்தல் அல்லது கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக வேண்டி ஏற்படும். இந்த சூழ்நிலை என்பது 'சுகாதார' துறையினரின் அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கு பாரிய சவாலானது என்பதுடன் ஒரு 'தீரனிய' குழந்தை 'கோவிட் - 19' நோய்த்தொற்றுக்கு உட்பட்டால் நிலமையை இன்னும் மோசமாக மாற்றலாம்.

 

ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தீரனிய குழந்தை முகக்கவசம் அணிவதோ, புதிய நபர்கள், சுகாதார உத்தியோகஸ்தர்களுடன் பழக்கப்பட, இசைந்து கொடுப்பது என்பது மிகவும் சவாலிற்குரியது. அவர்களால் தங்கள் உடல் உபாதைகள், நாளாந்த தேவைகள், அரவணைப்பு தேவைகளை சாதாரண பிள்ளைகள் போல் சொல்லக்கூடிய நிலமையில் இருப்பதில்லை. இவர்களை தனிமையாக, பெற்றோரின் உதவியின்றி விடுதியில் அனுமதிப்பது என்பது நடக்கக்கூடிய விடயமல்ல. எனவே தீரனிய குழந்தைகளை சுயதனிமைப்படுத்தல், சுய அனுமதித்தல், சிகிச்சைக்கு உட்படுத்துதல் என்பது தனியாக நடப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் முற்றாக இல்லை என்பதே உண்மையானது. இவ்வாறான சூழ்நிலைகளில் தனிக்குடும்பங்களில் தீரனிய குழந்தைகளும் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த சூழ்நிலையில் சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் 'கோவிட் - 19' பெருந்தொற்று சமூக தொற்றாக மாறும் சூழ்நிலையில், தீரனிய குழந்தைகள் கொண்ட குடும்பங்களில் நோய் பரவல் காணப்படும் போது, விடுதியில் அனுமதிக்கப்பட்டாலே, தனிமைப்படுத்தலிற்கு உட்படும் சூழ்நிலை ஏற்பட்டாலோ, இவர்களிற்கான விசேட ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டியது நோய்த்தடுப்பு, நோய்களிற்கு சிகிச்சையளிக்கும் துறைசார்ந்தவர்களிற்கு பொறுப்பானது.அத்துடன் கோவிட் - 19 பெருந்தொற்றுக்காலம் தீரனியக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் சில நேர்முகமான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பொது முடக்கநிலையானது தொழில்சூழ்நிலையில் இருந்து தற்காலிக விடுமுறையை கொடுத்ததால் பெரும்பாலான பெற்றோர்கள் கூடுதலான நேரத்தை, நாட்களை வீட்டில் குடும்பத்துடன் செலவு செய்ய வழி ஏற்படுத்தியது.

 

ஒன்றாக சேர்ந்து வாழ்தல் என்பது குடும்பத்தில் பிள்ளைகளுடன் அதிக நட்புணர்வை, இணைப்பை ஏற்படுத்த வழியேற்படுத்தியது. அத்துடன் பிள்ளைகளிற்கான வீட்டுச் சூழலை எதிர்காலத்தில் எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பொது முடக்க காலம் வீட்டில் கணவன், மனைவியின் வகிபாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக அவர்களின் வேலைகளில் பங்கெடுத்து, அவர்களிற்கு ஓய்வு கொடுக்கவும் உதவியுள்ளது. இது 'தீரனிய' குழந்தைகளின் உடன்பிறப்புகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண பிள்ளைகள் தங்கள் உடன் பிறந்த 'தீரனிய' சகோதர/சகோதரியின் நடத்தைகள், செயல்கள் அறிந்து அவர்களுடன் ஒத்திசைந்து செயற்படுவதற்கான சூழலையும் ஏற்பட ஏதுவாக அமைந்துள்ளது.

 

இந்த பொது முடக்ககாலம் புதிய விடயங்களை கற்றுக் கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியது. பிரயோக நடத்தைமாற்று சிகிச்சை குறித்து படித்து அவற்றை தீரனிய பிள்ளைகளும் செயற்படுத்துவதற்கான நற்தருணமாக அமைந்துள்ளது. உதாரணமாக பிரயோக நடத்தை மாற்று செயற்பாடுகள் என்பது தீரனியர்களின் நடத்தைகள் கையாள்வதற்கான மூலைக்கற்கள் ஆகும். பெரும்பாலான பிரயோக நடத்தை மாற்று சிகிச்சையாளர்கள் பெற்றோர்களிற்கு தங்கள் பிள்ளைகளுடன் குறைந்தது 6 மணி நேரமாவது இவற்றை செயற்படுத்த பரிந்துரை செய்கிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் என்ற செயற்பாடு எமது தீரனிய பிள்ளைகள் நடத்தைகளில் பாரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கும், அவர்களின் திறன் விருத்திக்கும் மிகவும் பயனுள்ளது. பொது முடக்க சூழ்நிலை என்பது தொழில் செய்யும் பெற்றோர்களிற்கு தங்கள் 'தீரனிய' குழந்தைக்கு பெற்றோராக செய்தவற்கு நிறைய சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது.

 

பெற்றோர் தங்கள் பிள்ளையுடன் இணைந்து செயற்பாடுகளை செய்வதற்கு புதிய நாளாந்த செயற்பாடுகளை பழக்குவதற்கு சமூக செயற்பாடுகளை கூட செய்வதற்கும் குறிப்பாக புதிய சூழலிற்கு பிள்ளை இசைவாகி செயற்படுவதை பழக்குவதற்குமான சூழல் ஏற்பட்டுள்ளது. சாராம்சமாக 'கோவிட் - 19' உலகளாவிய பெருந்தொற்று தீரனிய குழந்தைகள் கொண்ட குடும்பங்களில் பல்வேறு புதிய சவால்களை தோற்றுவிக்கின்றது. புதிய சுகாதார நடைமுறைகள், திட்டங்கள் உருவாக்கி செயற்படுத்தும் சுகாதாரத்துறை, தீரனிய பிள்ளைகள் போல் ஏனைய மாற்றுவலுவுள்ளவர்களையும் உள்வாங்கி அவர்கள் நலன் பாதிக்காதவாறு இந்த கோவிட் காலத்தை எதிர்கொள்ள ஆவண செய்வார்கள் என எதிர்ப்பார்க்கின்றேன்.

 

மருத்துவ பேராசிரியர். தி. குமணன் -
யாழ் பல்கலைக்கழகம்