இலங்கை செய்திகள்


பாதுகாப்பு சபை கூட்டங்களின்போது பேசப்பட்ட விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் - நலிந்த ஜயதிஸ்ஸ

Jul 12, 2019


பாதுகாப்பு சபை கூட்டங்களின்போது என்ன விடயம் பேசப்பட்டது என்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டம் ஒன்றின்போது வெனிசுவேலா ஜனாதிபதி மீது ட்ரோன் கமரா தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாகவும் இதேபோன்ற தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வெளிப்படுத்தினார் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது. இவ் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இறுதி சடங்குக் குழுக்கள் கூட ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடுகின்றன. ஆனால் பாதுகாப்பு சபை கடந்த மூன்று மாதங்களில் ஒரு முறை மட்டுமே கூடியது.

குறிப்பாக பாதுகாப்பு சபை கூட்டம் 2017 ஜூலை கூடியது. இதன்பின்னர் ஒக்டோபரில் மட்டுமே கூட்டப்பட்டது. பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால் தற்போதுவரை அதுவும் கூட்டப்பட்டிருக்காது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விருப்பப்படி பாதுகாப்பு சபையைக் கூட்டி அதன் மூலம் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் முயற்சியை மேற்கொள்கின்றார்.

உளவுத்துறை தகவல்கள், செயற்பாடுகள் மற்றும் முடிவுகள் ஜனாதிபதியினால் எடுக்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பாக எல்லோரும் முடிவுகளை எடுக்க முடியாது இதனால்தான் தேசிய பாதுகாப்பு போன்ற முக்கியமான விடயத்தைப் பற்றி கலந்துரையாட பாதுகாப்பு சபைகளை நாடுகள் நிறுவியுள்ளன.

எல்லோரும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்குபற்றிவிட முடியாது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் வருந்தத்தக்கது” எனத் தெரிவித்தார்.