வரலாறு செய்திகள்


தெளிவத்தை ஜோசப் - 1934 - 2022

Oct 21, 2022


இலங்கையின் மூத்த இலக்கிய படைப்பாளி சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் ஐயா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்
அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய சில குறிப்புகள்,

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஊவா கட்டவளை எனும் தேயிலைத் தொட்ட கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றிய சந்தனசாமிக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் 1934 ஆம் ஆண்டு பெப்ருவரி பதினான்காம் திகதி மகனாகப் பிறந்தவர் ஜோசப்.
மூன்று சகோதரர்கள் ஒரு சகோதரி என கத்தோலிக்க குடும்ப நுழலில் வளர்ந்த இறைநம்பிக்கை கொண்ட ஜோசப் தன் தந்தையையே குருவாகக் கொண்டு ஊவாகட்டவளை தோட்டத்துப்பள்ளியில் தொடக்க கல்வியை ஆரம்பித்தார்.இரண்டாம் நிலை கல்விக்காக பதுளை செல்லவேண்டிய நிலையில் பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தந்தையின் பிறந்த ஊரான தமிழ்நாடு கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர் நிலைப் பள்ளியில் சிறிது காலம் கற்று மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென்பீட்டஸ் கல்லூரியில் சாதாரண தரம் வரை கல்விகற்றார்.

தனது தந்தையின் வழியில் தெளிவத்தை எனும் தேயிலைத் தோட்டத்து பள்ளியின் ஆசிரியராகவும் தோட்டத்து லிகிதராகவும் சமகாலத்தில் பதவியேற்ற ஜோசப் வாசிப்பிலும் எழுத்திலும் அக்கறை காட்டத்தொடங்கினார். குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டுத் தொடர்புகள் இருந்ததன் காரணமாக தமிழக சஞ்சிகைகளை வாசிக்க பழகியுதுடன் தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதவும் தொடங்கினார். அறுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த உமா எனும் சஞ்சிகைக்கு அவர் எழுதிய ‘வாழைப்பழத் தோல்’ எனம் சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக பதிவாகிறது. அதனைத்தொடர்ந்து இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி நடாத்திய மலையக சிறுகதைப் போட்டியில் 1962, 1963, 1964 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறுகதைக்கான முதற்பரிசு பெற்று இலங்கையில் சிறுகதை படைப்பில் பிரபலமானார். அதுவரை ஜோசப் என்றிருந்த அவரது இயற்பெயருடன் அவர் தொழில் செய்து வாழ்ந்து வந்த தெளிவத்தை எனும் பெயரும் ஒட்டிக்கொள்ள ‘தெளிவத்தை ஜோசப்’ எனும் இலக்கிய பெயருக்கு சொந்தக்காரனானார்.

1974 ஆம் ஆண்டு வீரகேசரியில் தொடராக வெளிவந்த ‘காலங்கள் சாவதில்லை’ எனும் புதினம் நூலாகவும் வெளிவந்து இலங்கை சாகித்ய மண்டல பரிசுக்கு பரிந்துரையானதுடன் நாவல் இலக்கியத்திலும் தன்னை அடையாளப்படுத்தினார். 1979 ஆம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதை தொகுப்பான ‘நாமிருக்கும் நாடே’ வெளியானதுடன் அந்த ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்ய விருதினையும் வென்றது. இதே சமகாலத்தில் தொழில் நிமித்தமாக பதுளை மாவட்டத்தில் இருந்து வெளியேறி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் குடியேறினார் தெளிவத்தை ஜோசப்.

மலையகத்தின் பதுளை மாவட்டத்தில் வசித்த போது மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியலை தன் படைப்புக்களால் அழகியல் உணர்வுடன் வழங்கிவந்த தெளிவத்தை ஜோசப் தலைநகரில் வாழத்தொடங்கிய பின்னர் மலையகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மானிடர்க்காகவும் ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் தனது படைப்புகளை விரிவுபடுத்தினார். இனவாக தாண்டவம் எழுந்த கொழும்பு சூழலில் அவர் எழுதிய ‘குடைநிழல்’ (புதினம்) ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ (புதினம்) போன்றன இதற்கு சான்று.

படைப்பு இலக்கியங்களில் மாத்திரமல்லாது இலக்கிய ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்ட தெளிவத்தை ஜோசப் மலையக சிறுகதை வரலாறு எனும் தொடர் ஆய்வினை செய்து அதனை நுலாகவும் வெளிக்கொணர்ந்தார். இதற்காக 2000 ஆம் ஆண்டு இலங்கை அரச தேசிய சாகித்ய விருதினை ஆய்விலக்கியத்துக்காகப் பெற்றுக்கொண்டார். இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இலக்கிய பயணம் மேற்கொண்ட தெளிவத்தை ஜோசப் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் சிறப்புரைகளை வழங்கியிருக்கிறார். எழுத்துத் துறைக்கு அப்பால் ஒரு ஆவண சேகரிப்பாளராக பல்வேறு இலக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பதுடன்; அவ்வப்போது இலக்கிய தகவல்களாக பத்திரிகைகளுக்கு எழுதியும் வந்தார்.

இலக்கிய உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்துவரும் தெளிவத்தை ஜோசப்பின் இலக்கிய பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைகழகங்கள், இலக்கிய அமைப்புகள், பல விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளனன. 2013 ஆம் ஆண்டு தமிழகத்திலும் விஷ்ணுபுரம் விருது தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. கொடகே தேசிய சாகித்ய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டுள்ள இவர் கலாசார அமைச்சின் ‘தேச நேத்ரு’ விருதுக்கும் உரியரானார்.

தனது இரண்டாவது சிறுகதை தொகுப்புக்காகவும் 2013 ஆம் ஆண்டு தேசிய சாகத்திய பரிசு பெற்றவர் மொத்தமாக மூன்றுமுறை சாகித்ய விருதினை வென்றுள்ளதுடன். இலங்கையின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (2014) வென்ற முதல் மலையகத் தமிழராகவும் தெளிவத்தை ஜேசாப் விளங்குகின்றார்.

இலங்கையில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்படும் தெளிவத்தை ஜோசப் எழுதிய நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 எனும் புதினத்துக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து கரிகாற்சோழன் விருது வழங்கி கௌரவிக்கின்றது.

‘சாகித்ய ரத்ன’ தெளிவத்தை ஜோசப்:
மலையக மண்வாசனைக்குக் கிடைத்தத் தேசிய அங்கீகாரம்
இலங்கை நாடானது கிராமிய பொருளாதார முறைமையில் இருந்து பெருந்தோட்ட பொருளாதார முறைக்கு கால் பதித்து கோப்பி, தேயிலை பயிர்செய்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியவுடன் பொருளதாரத்தில் மாத்திரமின்றி சமூகக் பண்பாட்டு கலை இலக்கிய கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அந்தவகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் இன்று மலையக மக்கள் என பலராலும் நாகரிகமாக அறியப்பட்டாலும் கூலிகள், கள்ளத்தோணிகள், வடக்கத்தியான்கள், இந்திய தொழிலாளர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள், இந்திய வம்சாவளியினர் என பலவாறு அழைக்கப்பட்டு வந்துள்ளனர். இன்றும் இந்த மக்களை ‘இந்திய தமிழர்’ என சுட்டும் மரபு சட்டரீதியாக இருந்தாலும் பண்பாட்டு ரீதியாக இந்த மக்களை ‘மலையக மக்கள்’ என அழைக்கும்; மரபு ஓங்கி வளர்ந்துள்ளது. இந்த சிந்தனை வலுப்பெற காரணமே அதுநாள்வரை ஏறக்குறைய நூறு ஆண்டுகளை இந்த நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த மக்கள் கூட்டத்தினரது ‘குடியுரிமை’ இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைதத்ததோடு பறிக்கப்பட்டதும், அந்நிய மனப்பான்மையுடன் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இவர்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியுமாகும்.

மலையக அரசியல் தொழிற்சங்க வரலாறு ஆழமானது. இன்றைய மலையக மக்களின் இயக்கத்துக்கு இன்றியமையாத பல பணிகளை அரசியல், தொழிற்சங்கத் துறை ஆற்றியிருக்கிறது. அதேநேரம் இந்த ‘மலையக மக்கள்’ எனும் கருத்துருவாக்கத்தை பண்பாட்டு அடிப்படையில் வளர்த்தெடுப்பதற்கு மலையக இலக்கியத்துறை ஆற்றியுள்ள, ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. கோ.நடேசய்யர் முன்வைத்த ‘நாம் இலங்கையர்’ என்ற மனஎண்ணம், சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் படைப்புகள் ஊடாக ‘மலைநாட்டவர்’ என்று பரிமாணம் பெற்று, தோழர் இளஞ்செழியன், இர.சிவலிங்கம் போன்றோரினால் ‘மலையக’ கருத்துருவாக்கமாக வலுப்படுத்தப்பட்டது. இந்த ‘மலையகம்’ எனும் சிந்தனையாளர்களின் கருத்துருவாக்கத்திற்கு உணர்வு கொடுத்தவர்கள் மலையக எழுத்தாளர்கள். அவர்கள் 1960களில் இயங்கத்தொடங்கிய ‘ஆத்திரப்பரம்பரையினர்’ என வரலாற்றில் பதிவாகின்றனர்.
அந்த ஆத்திரப்பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளரே தெளிவத்தை ஜோசப். 1934 ஆம் ஆண்டு பதுளை ஊவாகட்டவளை தோட்டத்தில் பிறந்து 1960 களில் எழுத்துலகில் நுழைந்து ஐம்பது வருடகாலம் தொடர்ச்சியாக எழுதி, இயங்கி வருபவர். ஆரம்ப காலங்களில் மலையக மக்களின் வாழ்வியலை, மாறாத மனம்கமழும் மண்வாசனையுடன் எழுதி வந்த இவர், பின்னைய நாட்களில் தலைநகர் நோக்கி இடம்பெயர்ந்தவராக, யுத்தகாலத்தின்போதான தலைநகர்சார் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் அவலத்தை தமது படைப்புக்களில் வெளிப்படுத்தியவர். இந்த இருநிலை வியாபகம் மலையக எழுத்தாளர்களுள் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு ஒரு தனித்துவத்தையும் அவருக்கு ஒரு பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தியது. புனைவு இலக்கியம் மட்டுமல்லாது புனைவு சாரா இலக்கியத்திலும் அவர் தன்னை பதிவு செய்தார். இது தமிழக, மற்றும் புலம்பெயர் தமிழ் இலக்கிய, செயற்பாட்டுச் சூழலில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பிரபலமாக்கியது.

மலையக எழுத்தாளராக மேற்குலக நாடுகளிலும் தமிழகத்திலும் நன்கு அறியப்பட்டவராக மலையக இலக்கிய தளத்திலிருந்து, ஈழத்து இலக்கிய தளத்திலும் தமிழ் இலக்கியத் தளத்திலும் இவரது ஆளுமை அடையாளம் கண்டது. தமிழக இலக்கியவாதிகளை இலங்கைக்கு அழைத்து கௌரவிக்கும் நிலையில் தெளிவத்தை ஜோசப் அவர்களை தமிழகம் அழைத்து விருது வழங்கி கௌரவித்தது. தெளிவத்தை ஜோசப் அவர்களது ‘கூனல்’ எனும் சிறுகதை உலகத்தரம் வாய்ந்தது என்று எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும், ‘மீன்கள்’ எனும் சிறுகதை தமிழில் வெளியான முதல் நூறு சிறந்த சிறுகதைகளில் அடங்கப்பெறும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் பட்டியிலிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மட்டுமல்லாது தெளிவத்தை ஜோசப்பின் ஒன்பது சிறுகதைகளைத் தொகுத்து தானே தொகுப்பாசியராக ‘மீன்கள்’ எனும் தலைப்பில் ஜெயமோகன் வெளியிடும் அளவுக்கு அந்த கதை அவரில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையின் பிராந்திய இலக்கியம் தவிர்ந்து சிங்கள இலக்கிய சூழலிலும் அறியப்பட்ட ஆளுமையாக இருக்கும் தெளிவத்தை ஜோசப் தற்போது மலைநாட்டு எழுத்தாளர் மன்ற தலைவராக மட்டுமல்லாது சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.
இந்த நிலையிலேயே தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் அதி உயர் இலக்கிய விருதான ‘சாகித்திய ரத்ண’ 2014-09-03 அன்று இலங்கை நாட்டின் ஜனாதிபதி கரங்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சிங்கள இலக்கியம் மற்றும் புலமைசார் துறைக்கு ஆற்றிய பணிகளுக்காக பேராசிரியர் விமல் திசாநாயக்க மற்றும் ஆங்கில இலக்கிய மற்றும் ஊடகத்தறைக்கு வழங்கிய பங்களிப்புக்காக எழுத்தாளர் கார்ல் முல்லர் ஆகியோரோடு ஈழத்து தமிழிலக்கியத்துறைக்கு பொதுவாகவும் மலையக இலக்கியத்துக்கு குறிப்பாகவும் தமது சீரிய பங்களிப்பை நல்கியமைக்காக தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும் இந்த சாகித்ய ரத்ன விருதும் பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் இவ்வுயர் இலக்கிய விருதானது, இதுவரை மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, எம்.எம்.;சமீம், வரதர், சொக்கன், செங்கைஆழியான், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் சபா ஜெயராசா, பேராசிரியர் அருணாசலம், எழுத்தாளர் தெணியான் போன்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கும் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது. பதுளையை பிறப்பிடமாகக் கொண்ட, முற்போக்கு எழுத்தாளரான எம்.சமீம் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களின் மண்வாசனை கொண்ட எழுத்தாளர்கள் வரிசையில் முக்கிய மலையக படைப்பாளியாக விளங்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இலங்கை சாகித்திய ரத்ண விருது வழங்கப்படுவதானது இந்நாட்டுக்காக உழைத்தும் ஒருகாலத்தில் குடியுரிமை பறிக்கப்பட்ட, அந்நியர்களாக நாடுகடத்தப்பட்ட மலையக மக்களின் இலங்கைத் தேசிய அடையாளத்தை, மலையக தேசியத்தின்; தனித்துவத்தை உணர்த்தும் அதேவேளை மலையக இலக்கியத்தின் ஊடாக வளர்த்தெடுக்கபட்டுள்ள மலையக மண்வாசனைக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாக அமைந்துள்ளது எனலாம்.

- மல்லியப்பசந்தி திலகர் -