இலங்கை செய்திகள்


கல்வி அமைச்சர் அகிலவிராஜ் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Sep 11, 2019


கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றும்  I.M.K.B. இளங்கசிங்கவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணை தொடர்பாக சாட்சியம் வழங்குவதற்காகவே அமைச்சர் இன்று முன்னிலையாகவுள்ளார்.

கல்வி அமைச்சரினால் தீங்கிழைக்கும் நோக்கில் தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இளங்கசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாடப் புத்தகங்களில் விடயத்திற்குபொறுப்பான அமைச்சரின் புகைப்படம் அச்சிடப்பட்டமை தொடர்பாக சாட்சியம் வழங்கிய இளங்கசிங்கவை இடமாற்றம் செய்து கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இது தொடர்பாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவரை மீண்டும் அமைச்சின் விநியோகப்பிரிவு அத்தியட்சகராக ஆணைக்குழு நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பின்னர், இளங்கசிங்கவிற்கு எதிராக கல்வி அமைச்சினால் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.