இலங்கை செய்திகள்


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் - சுமந்திரன்

Jul 11, 2019


அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமையின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் செயற்பாடுகளை துரித கதியில் மேற்கொள்ள அரசாங்கம் உறுதியளித்துள்ளது. முதற்கட்டமாக நிதி அதிகாரம் வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் இன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளன“ என சுமந்திரன் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையினால் 27 மேலதிக வாக்குகளினால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.