இந்தியா செய்திகள்


கர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்க வாய்ப்பு

Aug 13, 2019


கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  இதனால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.


இதை தொடர்ந்து  காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு  தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதில்  காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.  காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில், மத்திய ஜலசக்தி துறை விடுத்துள்ள செய்தியில், கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.  இதனை தொடர்ந்து கர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.  இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் 5 முதல் 6 டி.எம்.சி. வரை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.  இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.