இலங்கை செய்திகள்


எலும்புக்கூடுகளின் பரிசோதனை அறிக்கை 14 ஆம் திகதிக்கு பின்னரே  வெளிவரும்

Feb 11, 2019


மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னரே  வெளிவரும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகளின் ஆய்வு அறிக்கை தொடர்பாக கூறும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,  “மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மறு நாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு 25 ஆம் திகதி  புளோரிடாவில் கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது.

குறித்த மாதிரிகள் ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்ட போது ஆய்வு அறிக்கை 14 கடமை நாட்களின் பின்னரே கிடைக்கும் என தெரிவித்திருந்தார்கள். அவர்கள் வழங்கிய கால அவகாசத்திற்கு அமைய எதிர்வரும் 14 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னரே ஆய்வு அறிக்கை கிடைக்கும்.

குறித்த அறிக்கை 14 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு,அதன் பிரதிகள் எங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்” என்று கூறினார்.