22 Jun 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும் எனவும், அதன் பின்னர் திட்டமிட்டவாறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.எம்.எப்பின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் இலங்கையில் பல்வேறு அதிகார மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள், நெருக்கடி குறித்த தரவுகள் ரீதியான ஆய்வுகளையும் பெற்றுக்கொண்டு இலங்கையின் செயற்பாடுகளை கண்காணித்தே அடுத்த கட்ட தீர்மானங்களை முன்னெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் (20) முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது இலங்கையின் கள நிலவரங்கள் மற்றும் இலங்கை கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியதுடன் பணியாளர் மட்டத்திலான இணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும், எதிர்காலத்தின் ஐ.எம்.எப்புடன் திட்டமிட்ட வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.