இந்தியா செய்திகள்

66 வருடங்களுக்கு பிறகு விரல் நகத்தை வெட்ட முடிவு எடுத்த இந்தியர் !

11 Jul 2018

உலகிலேயே மிகவும் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்தியரான ஸ்ரீதர் சில்லால், 66 வருடங்களுக்கு பிறகு தனது விரல் நகத்தை வெட்ட முடிவு செய்துள்ளார்.  தற்போது 82 வயதான ஸ்ரீதர் கடந்த 1952-ம் ஆண்டு முதல் தான் ஆசையாய் வளர்த்த நகங்களை வெட்டவே இல்லையாம்.

16 வயதில் தொடங்கி தற்போது வரை சுமார் 909.6 செமீ (9.1 மீட்டர்) நீளம் தனது நகத்தை வளர்த்து சாதனை படைத்துள்ளார்.நகத்திற்காக பல தியாகங்களை செய்த இவர் குடும்பத்தாரின் ஏச்சையும் பேச்சையும் சகித்துக் கொண்டு இறுதியில் கின்னஸ் சாதனையும் படைத்தார். இந்த நிலையில், தனது விரல் நகங்களை வெட்ட தற்போது முடிவு செய்துள்ளார்.

வெட்டப்படும் தனது நகத்தை நீண்ட காலம் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று சிலால் கோரிக்கை வைத்தார். சில்லாலின் கோரிக்கையை, டைம் சதுக்கத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகமான ரிப்லேஸ் பெலிவ் இட் ஆர் நாட், ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக புனேவில் இருந்து நியூயார்க்கிற்கு சிலாலை அருங்காட்சிய அலுவலர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.  நிகழ்ச்சி ஒன்றை வைத்து சில்லாலின் நகத்தை வெட்ட அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.  சில்லாலின் கட்டை விரல் நகம் மட்டும் 197.8 செ.மீ நீளம் உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஒரு கையில் அதிக நீளமான நகங்களை கொண்ட நபர் என்ற சாதனைப்பிரிவில் சில்லால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். 16-வயதில், தனது ஆசிரியரின் நீளமான விரல் நகத்தை முறித்ததாகவும், இதனால், ஆசிரியர் தாக்கியதாகவும், இதையடுத்து, தனது நகத்தை வெட்டவே கூடாது என்று வைராக்கியமாக இருந்து இவ்வளவு காலமும் நகத்தை வளர்த்ததாக சில்லால் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்