உலகம் செய்திகள்

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

05 Oct 2017

அறிவியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு சுவிட்சர்லாந்தின் லவுசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜாக்குஸ் டியுபோசெட், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோக்கிம் பிராங் மற்றும் லண்டனின் கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஆர்.சி. ஆய்வுக்கூடத்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹண்டர்சன் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. விஞ்ஞானி ஜோக்கிம் பிராங் ஜெர்மனியில் பிறந்தவர் ஆவார்.

மூலக்கூறுகளை முப்பரிணாம முறையில் துல்லியமாக படம் பிடிக்க உதவும் கிரையோ எலக்ட்ரான் நுண்ணோக்கியை வடிவமைத்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாகவும், இந்த நுண்ணோக்கியால் உயிர் வேதியியல் துறை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி நகர்த்தப்பட்டு இருப்பதாகவும் நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது.

இவர்களுக்கு பரிசுத்தொகையாக 9 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் ரூ.7 கோடி) கூட்டாக வழங்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV