விளையாட்டு செய்திகள்

20 ஓவர் கிரிக்கெட்டில் கெய்ல் சதம் அடித்து அசத்தல்

12 Sep 2019

கரிபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதன் 7-வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலவாஸ்-செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த செயின்ட் கிட்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா தலவாஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. 54 பந்துகளில் சதத்தை எட்டிய அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 62 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாட்விக் வால்டன் 36 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்சருடன் 73 ரன்கள் சேர்த்து ‘அவுட்’ ஆனார்.

பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய செயின்ட் கிட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிவோன் தாமஸ், இவின் லீவிஸ் ஆகியோர் எதிரணி பந்து வீச்சை வெளுத்து வாங்கி வேகமாக ரன் திரட்டினார்கள். 17 பந்துகளில் அரைசதத்தை கடந்து சாதனை படைத்த இவின் லீவிஸ் 53 ரன்னில் (18 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த லாய்ரி இவான்ஸ் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிலைத்து நின்று ஆடிய டிவோன் தாமஸ் 40 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

18.5 ஓவர்களில் செயின்ட் கிட்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபியன் ஆலென் 15 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். செயின்ட் கிட்ஸ் வீரர் இவின் லீவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் (2018) ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றிகரமாக சேசிங் செய்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

20 ஓவர் போட்டியில் ஒட்டுமொத்தமாக கெய்ல் அடித்த 22-வது சதம் இதுவாகும். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் மிக்கேல் கிலின்ஜெர் 8 சதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் கெய்ல் இதுவரை 156 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள இவின் லீவிஸ் 99 சிக்சர்கள் அடித்துள்ளார்.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்