இந்தியா செய்திகள்

60 குழந்தைகள் பலி: மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

13 Aug 2017

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் மாநில அரசு, மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஸ்ராவை நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தது. அவர் விடுப்பில் இருந்தபோதிலும், ஆக்சிஜன் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தின் கடிதங்களை புறந்தள்ளியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைகளின் மரணத்துக்கான காரணம் மற்றும் அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா படேலை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்துக்கு அனுப்பிவைத்தார். மேலும் அங்கு நிலவும் சூழலை தொடர்ந்து அவர் கண்காணித்து வருவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இதற்கிடையே 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங்கை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தொடர்பு கொண்டு பேசினார்

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV