கனடா செய்திகள்

20 கனேடிய காவல்துறை அதிகாரிகள் ஈராக்கிற்கு பயணமாகின்றனர்

12 Aug 2017

சுமார் 20 கனேடிய காவல்துறை அதிகாரிகள் ஈராக்கிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். ஈராக்கில் ஐ.ஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடாவின் இராணுவப் பங்களிபினை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதான தீர்மானத்தினை பிரதமர் ஜஸடின் ரூடோ தலைமையிலான அரசாங்கம் கடந்த யூன் மாத இறுதியில் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்படும் கனேடிய காவல்துறையின் ஆண் பெண் அதிகாரிகள், ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பிடமிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை கட்டமைப்புகளை மீள ஏற்படுத்திக் கொள்வதற்கான உதவிகளை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மூன்று கனேடிய காவல்துறை அதிகாரிகள் ஈராக்கில் பணியாற்றிவரும் நிலையில், நான்காவது அதிகாரி எதிர்வரும் மாதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், ஏனையோர் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், நெருக்கடிகளின் பிடியில் சிக்கியுள்ள ஈராக்கின் நிலைத்தன்மையை சீர்செய்யும் நடவடிக்கைகளில் கனேடிய காவல்துறையினர் தமது பங்களிப்பினை வழங்குவார்கள் என்று கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV