இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல்- 2018: முடிவுகள் அனைத்தும் வெளிவந்தன

12 Feb 2018

 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது. 
 தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் தற்போது 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 44.65 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும், அந்த கட்சிக்கு எதிராக சுமார் 55 வீதமான மக்கள்  எதிராக வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில், 4,941,952 வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம், அந்த கூட்டணிக்கு 3369 ஆசனங்கள் கிடைத்துள்ளன. வடக்கில் ஒருசில இடங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொஜன பெரமுன சுமார் 15 மாவட்டங்களில் அமோக வெற்றிபெற்றுள்ளது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஏனைய சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக சுமார் 55 வீதமாக மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் இரண்டாமிடத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளது. இந்தக் கட்சி 41 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது. கட்சிக்கு ஆதரவாக, 3,612,259 வாக்குகள் (32.63%) கிடைத்துள்ளன. இந்தக் கட்சிக்கு 2,385 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

மன்னார், நுவரெலிய, அம்பாறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐ.தே.க அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்த மாவட்டங்களில் தமிழ், மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அமைத்த கூட்டணிகளின் மூலமே ஐ.தே.கவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, நீர்கொழும்பு, மாநகரசபைகள், மற்றும் கொலன்னாவ நகரசபை, வத்தளை- மாபொல நகரசபை உள்ளிட்ட 41 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு உள்ளிட்ட சில இடங்களில் தனித்து கை சின்னத்திலும், ஏனைய இடங்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 989,821 வாக்குகளை (8.94%) பெற்று 674 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 491,835 வாக்குகளை ( 4.44% ) பெற்று 358 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மொத்தமாக, 1,481,656 வாக்குகளை (13.38%) பெற்று மொத்தம் 1032 ஆசனங்களை இந்த இரண்டு கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. இந்தக் கட்சிகள் 10 உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளன.

ஜேவிபி 693,875 வாக்குகளை (6.27% ) பெற்று 431 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும் எந்தவொரு உள்ளூராட்சி சபையையும் ஜே.வி.பி கைப்பற்றவில்லை.

அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமார் 339,675 வாக்குகளை (3.07%) பெற்றுள்ளது. கூட்டமைப்பு 38 உள்ளூராட்சி சபைகளில் 407 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்