இந்தியா செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் போராட்டத்தில் வன்முறை

11 Feb 2019

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ந் தேதி போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ரெயில் மறியல், சாலை மறியல், தர்ணா மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக குஜ்ஜார் இன மக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். தோல்பூர் மாவட்டத்தில் ஆக்ரா-மோரேனா நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அதில் பங்கேற்ற சிலர் வானத்தை நோக்கி 8 முதல் 10 ரவுண்டுகள் வரை துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை கல்வீசி தாக்கினார்கள்.

இதில் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். போலீசாருக்கு சொந்தமான 3 வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

ஷவாய் மதோபூர் மாவட்டத்தில் டெல்லி-மும்பை ரெயில் வழித்தடத்தில் அராக்‌ஷன் சங்ரிஷ் சமிதி அமைப்பின் தலைவர் கிரோரி சிங் பன்சிலா தலைமையில் ஏராளமானோர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய ஏராளமான ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் குஜ்ஜார் இன மக்கள் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மலர்னா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஏராளமான போலீசார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே மாநில சுற்றுலாத்துறை மந்திரி விஸ்வேந்திர சிங் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கிரோரி சிங் பன்சிலா மற்றும் அவரது குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதுபற்றி கிரோரி சிங் பன்சிலா கூறுகையில், ‘கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அரசு உறுதி அளிக்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும். அதுவரையிலும் அரசு எந்த பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்