இந்தியா செய்திகள்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மரணம்

22 Sep 2022

மதுரை மாவட்டத்தில் மூத்த அரசியல்வாதியாக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. முன்னாள் சபாநாயகரான இவர், உடல் நலக்குறைவால் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டி ஆகும்.

சேடப்பட்டி முத்தையாவின் இறுதிச்சடங்கு முத்தப்பன்பட்டியில் உள்ள தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகன், 2 மகள்களும் உள்ளனர். இவரது இளைய மகன் மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார்.

4 முறை எம்.எல்.ஏ.

தமிழக சட்டமன்றத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா.

இவர் 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் மதுரை மாவட்டம் சேடப்பட்டி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேடப்பட்டி தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் சேடப்பட்டியார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என 5 முதல்-அமைச்சர்களுடன் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

வாக்கெடுப்பில் சர்ச்சை

2 முறை பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் 1998-99-ம் ஆண்டுகளில் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்தார்.

1999-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில், வாஜ்பாய் தலைமையிலான அரசு, நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதில் சேடப்பட்டி முத்தையா வாக்களிக்க தவறியதால் பெரும்சர்ச்சை ஏற்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாஜ்பாய்க்கு ஆதரவாக 269 ஓட்டுகளும், எதிராக 270 ஓட்டுகள் பதிவானது.

தி.மு.க.வில் சேர்ந்தார்

இதன்பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2006-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.

கடந்த 16 ஆண்டுகளாக தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.

2006-ம் ஆண்டு கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்ட சேடப்பட்டி முத்தையா அப்போது முதல் தி.மு.க.வின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார்.

நலம் விசாரித்தேன்

அண்மையில் மதுரை சென்றிருந்தபோது, உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி வேதனையை தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam