உலகம் செய்திகள்

மாலத்தீவு முன்னாள் அதிபர் குற்றச்சாட்டுக்கள் கட்டுக்கதைகள்: சீனா விளக்கம்

13 Feb 2018

மாலத்தீவில் நெருக்கடி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் யாமீன் கயூம் அண்மையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், முன்னாள் அதிபரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் கோரிக்கை விடுத்தார். ஆனால், மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராணுவ தலையிடு சரியாக இருக்காது என சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில், கொழும்புவில் தஞ்சம் அடைந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் செய்தியாளர்களுக்கு கடந்த மாதம் பேட்டி அளித்தார். தனது பேட்டியில், மாலத்தீவில்,சீனா நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாகவும், சீனாவின் இந்த செயல், மாலத்தீவுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லை. அந்த பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மிகப்பெரிய வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த நாடு, மாலத்தீவுகளை வாங்குவதில் ஆர்வமாக உள்ளது” என்று சீனாவை குறிப்பிட்டு கடுமையாக பேசி இருந்தார்.

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்தின் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட நிலையில், இது குறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஷூயங் பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- “ முகம்மது நஷீத்தின் கருத்து முற்றிலும் அபத்தமான கட்டுக்கதைகளாகும். சீனா மற்றும் மாலத்தீவு ஒத்துழைப்புடன் செயல்படுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி இரு தரப்பினரும் ஆய்வு செய்து மதிப்பிட வேண்டும். இந்த விவகாரத்தை ஒரு சார்பான கருத்துக்களுடன் வரையறுக்க கூடாது” என்றார். 40 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தில் மாலத்தீவுகளில் உள்ள 17 தீவுகளை சீனா வாங்கியுள்ளதாக முகம்மது நஷீத் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்