கனடா செய்திகள்

டக் ஃபோர்ட்டின் திட்டத்திற்கு ஜோன் ரொறி கடும் எதிர்ப்பு

09 Aug 2018

ரொறன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையினை ஏறக்குறைய அரைப் பங்காக குறைக்கும் திட்டத்தினை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வன்மையாக கண்டித்துள்ளார்.

தனது சட்ட நிபுணர்களுக்கு அறிவிப்பு விடுத்து, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகி டக் ஃபோர்ட்  திட்டத்தினை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

டக் ஃபோர்ட்டின் குறித்த இந்த திட்டம் பிழையானது எனவும், நீதி அற்றது என்றும் தெரிவித்துள்ள ஜோன் ரொறி, அவ்வாறு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் அந்த திட்டம் பொதுவாக்கெடுப்பிற்கு விடப்பட்டு வெற்றிகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ரொறன்ரோ நகரசபையின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட திட்டமிடப்பட்டிருக்கும் 47 பேர் என்ற எண்ணிக்கையை 25ஆக குறைக்கப்போவதாகவும், அதற்கான தீர்மானத்தை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்திருந்தார்.

அத்துடன் தனது இந்த முடிவினை நியாயப்படுத்தியுள்ள அவர், ரொறன்ரோவில் ஆயிரக்கணக்கானோருடன் இது தொடர்பில் ஆலோசித்துள்ளதாகவும், அனைவரும் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டம் தொடர்பில் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ள ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி, இது குறித்து தான் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், இது மக்களை மதிக்கும் செயல் அல்ல எனவும் சாடியுள்ளார்.

சனநாயக முறைமையின் கீழ் இவ்வாறான ஒரு பெரும் மாற்றத்தினை அல்லது முடிவினை மேற்கொள்ளும் போது, அது பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, உரிய நடைமுறைப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 20  அன்று சிறப்பு கலந்தாய்வு ஒன்றை நடத்திய பின்பே, சட்ட ரீதியான அடுத்தகட்ட நகர்வு இருக்கும், இது  தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குறுக்கீடு என்று கூறியுள்ளார்.

Ward 13, Eglinton-Lawrence பகுதியை சேர்ந்த வேட்பாளரான  Rocco Achampong கடந்த வாரம் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் PC கொண்டுவந்துள்ள  Better Local Government சட்டத்தை நீக்குமாறு உத்தரவிட வேண்டி வழக்கு தொடுத்திருந்தார். 

அதில் முதல்வர் டக் ஃபோர்ட் திட்டம் நகர சபையின் எண்ணிக்கையை குறைக்குமே தவிர, வேறு எந்த விதத்திலும் நன்மை பயக்காது, இதனால் நகரசபை செயல்படாத தன்மையை நோக்கி செல்லும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்