இலங்கை செய்திகள்

கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றவே 20 வது திருத்தச் சட்டம் -அமைச்சர் ராஜித

09 Aug 2018

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 20 வது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வரவுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போதே சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களில் அரசாங்கத்தை கைப்பற்றுவோம் எனக் கூறிக்கொண்டிருந்தார்கள். இதுமுடியாது போனவுடன் தற்போது எதிர்க்கட்சிக்கு குறிவைத்து தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்காகவே, எதிர்க்கட்சித் தலைவரை வெளியேற்ற வேண்டும் என போராடி வருகிறார்கள். உண்மையில், ஒருங்கிணைந்த எதிரணி என்ற ஒன்று நாட்டில் இல்லை. அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பு வேண்டும் என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து வெளியேறிய பின்னரே இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து வெளியேறினால் அவர்களது நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாது போய்விடும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இறுதியாக இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அவர்கள் எந்த கட்சியில் போட்டியிட்டார்களோ, அதனைக் கருத்தில் கொண்டே இந்த விடயம் தீர்மானிக்கப்படும்.

2015, நூறு நாள் வேலைத்திட்டத்தின் போது நிமல் சிறிபால சில்வாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்தமைக்கும் இதற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அப்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிரணியில் இருப்பதாக அறிவித்தனர். சுதந்திரக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர், நிமல் சிறிபால டி சில்வா எனும் வகையிலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது.

அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பதால் தினேஸ் குணவர்த்தனவுக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக, அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே பிரதிநிதியாக இருகிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரே தமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் எனக் கூறும் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் தரப்பினருக்கு நாம் எவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்க முடியும்?

செங்கோலை தூக்குவதும், சபையில் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பினை தெரிவிப்பதும் மட்டும் எதிக்கட்சியின் வேலையல்ல. அந்தவகையில், தற்போதுள்ள பிரதான எதிர்க்கட்சியினர் மிகவும் சிறப்பாகவே செயற்படுகிறார்கள்.

இலங்கை வரலாற்றிலேயே அமிர்தலிங்கத்துக்குப் பிறகு சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், தனி இராஜ்ஜியத்தைக் கோராமல் அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டு, நன்றாகத்தான் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யவே 20 வது திருத்தச்சட்ட மூலத்தை தயாரித்து வருகிறோம். இதுவே, இவர்களினதும் நிலைப்பாடாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்