இலங்கை செய்திகள்

கிழக்கு ஆளுநரினால் ஆயிரக்காணக்கான ஏக்கர் காணிகள் கொள்வனவு - .ஸ்ரீநேசன்

15 May 2019

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு மாகாண ஆளுநரினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வெருகல் பிரதேசத்தின் இராமர் தீவு என்னும் இடத்தில் இருந்த கடற்புலிகளின் காணியே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரினால் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஸ்ரீநேசன் கோரியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நீதி அமைச்சு ஊடாக சமாதான நீதிபதிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “தற்போது எமது வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல அரசியல்வாதிகள் அளவுக்கதிகமாக காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். தற்போது கிழக்கு ஆளுநராக இருக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் ஒரு நிறுவனத்தின் பெயரில் மன்னார் மாவட்டத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கொள்வனவு செய்திருப்பதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெருகல் பிரதேசத்தில் இராமர் தீவு எனும் இடத்தில் கடற்புலிகளின் தளமாக இருந்த காணி கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகின்றது. அதேபோன்று திருகோணமலையில் சல்லித்தீவு பிரதேசம் மற்றும் பதுளை வீதியில் புல்லுமலை பிரதேசம் ஆகிய இடங்களில் கணிசமான காணிகள் உள்ளதாகக் கருத்துக்கள் நிலவுகின்றன. இவைகளைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது.

சாதாரண முஸ்லிம் மக்கள் இவ்வாறு காணிகளை சிறிது சிறிதாக கொள்வனவு செய்து அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்துவது பரவாயில்லை. ஆனால் இவ்வாறு அளவுக்கதிகமாக அரசியல்வாதி ஒருவர் கொள்வனவு செய்து வைத்திருப்பதென்பது எதிர்காலத்தில் என்ன நோக்கத்திற்கானது என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே, சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் குறிப்பிட்ட அரசியல்வாதியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றமை குறித்தும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்