உலகம் செய்திகள்

எகிப்து ரெயில் நேருக்கு நேர் மோதல் பலி 44 ஆக உயர்வு

13 Aug 2017

எகிப்து நாட்டில் ரெயில்கள் விபத்துக்குள்ளாவது என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு 2 பயணிகள் ரெயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு, அந்த நாட்டை வெகுவாக பாதித்துள்ளது.

தலைநகர் கெய்ரோவில் இருந்து மாவீரன் அலெக்சாண்டர் நிர்மாணித்த அலெக்சாண்டிரியா நகரை நோக்கி ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

மற்றொரு ரெயில், போர்ட் சையத் நகரில் இருந்து வந்து கொண்டிருந்தது.

இவ்விரு ரெயில்களும் அலெக்சாண்டிரியா நகர் அருகே உள்ளூர் நேரப்படி மதியம் 2.15 மணிக்கு நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

மோதிக்கொண்ட வேகத்தில் ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி கவிழ்ந்தன. பயணிகளின் அலறலும், ஓலமும் அந்தப் பகுதியை கதிகலங்க வைத்து விட்டது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 75 ஆம்புலன்சுகளும் விரைந்தன. விடிய விடிய மீட்புப்பணிகள் நடந்தன. இடிபாடுகளுக்கு இடையே நசுங்கிக்கிடந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 36 பேர் பலியானதாகவும், சுமார் 200 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாகவும், 180 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் நேற்று உறுதிபடுத்தப்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ரெயில் விபத்தில் அலெக்சாண்டிரியா சென்று கொண்டிருந்த ரெயிலில் பயணம் செய்த இமான் ஹாம்டி (வயது 26) என்ற பயணி, ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பி உள்ளார். விபத்து பற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த விபத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. எண்ணற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். பெண்களும், குழந்தைகளும் படுகாயங்களுடன் தவித்ததை நான் விபத்து நடந்த இடத்தில் பார்த்தேன்” என்று கூறினார்.

கரீம் அப்துல் வஹாப் என்ற 10 வயது சிறுவன், தன்னோடு ரெயிலில் வந்த தனது தாய், சகோதரனை காணவில்லை என கூறி தேடியது உருக்கமாக இருந்தது.

இந்த விபத்துக்கான காரணம் தெரிய வரவில்லை.

கெய்ரோ-அலெக்சாண்டிரியா ரெயில் டிரைவர் போலீசில் சரண் அடைந்தார். அவர் விசாரணைக்காக அலெக்சாண்டிரியா அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்று கண்டறிய உடனடி விசாரணைக்கு அந்த நாட்டின் தலைமை அரசு வக்கீல் நபில் சாதிக் உத்தரவிட்டுள்ளார்.

அதிபர் எல் சிசி, விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV