இலங்கை செய்திகள்

இலங்கைக்கு மூதேவி பிடித்த தினமாக நாளைய தினம் பொது எதிரணியால் பிரகடனம்

17 Aug 2017

தேசிய அரசின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கு மூதேவி பிடித்த நாளாகப் பிரகடனப்படுத்தி மஹிந்த அணியான பொது எதிரணி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு லிப்டன் சந்தியில் பிற்பகல் 3.00 மணிக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொது எதிரணி மும்முரமாக செய்து வருகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு அமையப் பெற்றது.

அதன் பின்னர் மீண்டும் அதே வருடம் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று தேசிய அரசை நிறுவியது.

அன்றுமுதல் இன்றுவரை தேசிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பொது எதிரணி செயற்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் ஓகஸ்ட் 18ஆம் திகதியும் அரசுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியை பொது எதிரணி நடத்தியிருந்தது. அதன் பின்னர் மக்களைத் திரட்டி கண்டியிலிருந்து கொழும்புக்கான நடை பயணப் போராட்டமொன்றையும் அரசுக்கு எதிராகப் பொது எதிரணி மேற்கொண்டிருந்தது.

இவ்வாறு அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பொது எதிரணி, ஓகஸ்ட் 18ஆம் திகதியை இலங்கைக்கு மூதேவி பிடித்த தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்புப் பேரணியில் பொது எதிரணியின் நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொது எதிரணியின் ஆதரவாளர்கள் எனப் பலருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்