கனடா செய்திகள்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு கனடா ஒருபோதும் அடிபணியாது - கிறிஸ்டியா ஃபிறீலான்ட்

13 Mar 2018

அமெரிக்காவின் உலோகப் பொருள் வரி விடயத்தை தொடர்பு படுத்தி NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில் கனடா மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது நாட்டுக்கான உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கான வரி விதிப்பிற்கான ஆணையைப் பிறப்பித்த அமெரிக்க அதிபர், அந்த ஆணையில் கனடா மற்றும் மெக்சிக்கோவுக்கு விதிவிலக்கு அளித்துள்ளார்.

எனினும் NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில் அமெரிக்காவுக்கான நலன்களின் அடிப்படையில் இந்த முடிவு மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து NAFTA பேச்சுக்களில் கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகித்து, தனது நலன்களுக்கு ஏற்ற வகையில் NAFTA உடன்பாட்டை மாற்றி அமைப்பதற்கான தந்திரோபாயமாகவே, அமெரிக்கா இநத் உலோகப் பொருள் வரி அதிகரிப்பை அறிவித்ததாகவும் கருத்துகள் வெளியாகி உள்ளளன.

இந்த நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் ,NAFTA பேச்சுக்களில் இதனை வைத்து அமெரிக்கா கனடாவை ஏமாற்றவோ, கனடா மீது அழுத்தங்களை பிரயோகிக்கவோ முடியாது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் உலோகப் பொருள் வரி அழுத்தம் காரணமாக NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில கனடா பணிந்து போகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கனேடிய உலோகப் பொருட்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா கூறிவருவது அபத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த இரண்டு விடயங்களும் எந்தவிதத்திலும் தொடர்பற்றவை என்றும் கூறியுள்ளார்.

NAFTA பேச்சுக்களில் இவை வெவ்வேறு தனிப்பட்ட விடயங்களே எனவும், இவ்வாறான எந்தவித அழுத்தங்களுக்கும் கனடா ஒருபோதும் அடிபணியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்