உலகம் செய்திகள்

ஸ்பெயினிடம் இருந்து காட்டலோனியாவை பிரிக்க ஆதரவு

03 Oct 2017

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் வடகிழக்கே உள்ள காட்டலோனியா பகுதி, தன்னாட்சி பெற்ற மாகாணமாக திகழ்கிறது. இந்த பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்கு ஸ்பெயின் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் காட்டலோனியா பகுதி தனி நாடாக வேண்டுமா? அல்லது ஸ்பெயினுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்வதற்கான பொது வாக்கெடுப்பு நேற்று முன்தினம் அந்த மாகாணத்தில் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்காத ஸ்பெயின் அரசு, இதை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொண்டது.

எனினும் வன்முறை, போலீஸ் தடியடி போன்ற கலவரங்களுக்கு மத்தியில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். சுமார் 22.6 லட்சம் பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இந்த வாக்கெடுப்பு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 90 சதவீதத்தினர் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது காட்டலோனியா பிராந்திய மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 42.3 சதவீதம் ஆகும்.

இதைத்தொடர்ந்து காட்டலோனியாவை தனி நாடாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அந்த மாகாண தலைவரான கார்லஸ் புயிக்டிமோன்ட் தொடங்கி உள்ளார். இந்த வாக்கெடுப்பு முடிவுகளை ஓரிரு நாட்களில் காட்டலோனியா பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து, பொது வாக்கெடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில் கூறினார்.

இந்த பொது வாக்கெடுப்பு சட்டம் காட்டலோனியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால், அது காட்டலோனியாவை சுதந்திர தனி நாடாக ஒருதலைப்பட்சமாக அறிவிக்க வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV