இலங்கை செய்திகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவரும் இலங்கைக்கு வரமுடியாத சூழ்நிலை - ஜி.எல்.பீரிஸ்

16 May 2018

உயிர் வாழ்வதற்கு விரும்பும் முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்குள் வரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனக் கூறப்படும், ஒருவரால்தான், இந்திய முதலீட்டாளர் நாகராஜனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி, ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்தான், இந்திய முதலீட்டாளர் நாகராஜன் ஆவர்.

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்திய முதலீட்டாளரான நாகராஜனுக்கு, விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர், நாட்டில் நீதித்துறை மோசமாகியுள்ளது. நாட்டை பாதாள உலக குழுவினர் ஆட்சி செய்வதாலேயே இவ்வாறான நிலைமை உருவாகியுள்ளது என்று கூறினார்.

மேற்படி இந்திய நிறுவனத்தின் உரிமையாளர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தன்னிடம் ​கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்தே குறித்த அதிகாரிகள் இலஞ்சம் கோரி வந்ததாகவும், இது தற்போது நடைபெற்ற சம்பவம் இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், கொழும்பிலுள்ள நாகராஜனின் காரியாலயத்துக்குத் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரென அறிமுகப்படுத்திக் கொண்டு சென்ற ஒருவர், நாகராஜனுக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு, நாகராஜனை கொலை செய்ய வேண்டும் எனத் தனக்கு, விடுதலைப் புலிகள் உத்தரவிட்டிருந்ததாக, அந்தநபர் தெரிவித்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்களை அரசாங்கம் பாதுகாப்பதற்குத் தவறியுள்ளது. நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் முதலீட்டாளர்கள் உள்ளனர். தாங்கள் எப்போது கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிவித்த ஜி.எல்.பீரிஸ், புத்திசாளியான, தங்களின் உயிர் மேல் ஆசையுள்ள, வாழ விரும்புகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவரும், இலங்கைக்கு வரமுடியாத சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது” என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்