இலங்கை செய்திகள்

வீடுகளில் நினைவேந்தல் அனுஷ்டிக்க முடியும் - வியாழேந்திரன்

25 Nov 2021

போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல்களை சட்டத்திற்கு உட்பட்டு, வீடுகளில் அனுஷ்டிக்க முடியும் என, பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், நேற்று (24) இடம்பெற்ற தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் இம்முறையே விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழரின் இருப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. திருகோணமலையில் ஓர் ஆசனம் தான் கிடைக்கிறது. இன்னும் சில வருடங்களில் அதுவும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

மேலும்,  முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சரியான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவர், தான் உட்பட 16 பேர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும் ஆனால் எதுவுமே நடக்கவில்லை எனவும் கூறினார்.

இந்நிகழ்வுக்கு பின்னர், நினைவேந்தல் தொடர்பாக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்படுகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்புகளை சந்தித்தவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு, வீடுகளில் நினைவேந்தல்களை அனுஷ்டிக்க முடியும். அவர்களுக்கு நாம் இந்த இடத்திலே ஆறுதலை சொல்ல விரும்புகிறோம் என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam