விளையாட்டு செய்திகள்

விராட்கோலி-ரோகித் சர்மா இடையே பிளவு

11 Sep 2019

ஒரு அணியில் 15 வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருடைய கருத்தும் வெவ்வேறு விதமாக இருக்க தான் செய்யும். எல்லோரும் ஒரே மாதிரியான கருத்துடன் இருக்க வேண்டும் என்று நானும் விரும்பியதில்லை. ஆலோசனையின் போது ஒருவர் புதிய திட்டத்தை சொன்னால் அதனை ஊக்கப்படுத்த வேண்டும்.

வீரர்கள் எல்லோருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் பிறகு அதில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியமானதாகும். அணியில் ஜூனியர் வீரர் ஒருவர் சொல்லும் யோசனை கூட நல்லதாக இருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வது அவசியம். வீரர்கள் வித்தியாசமான கருத்துகளை கொண்டு இருப்பதை பிளவு என்று கருத முடியாது.

கடந்த 5 ஆண்டுகளாக வீரர்கள் அறையில் நானும் இருந்து வருகிறேன். அவர்கள் ஒவ்வொருவருடைய அணுகுமுறையையும் நான் கவனித்து உள்ளேன். அவர்கள் அனைவரும் தங்கள் பணியை உணர்ந்து செயல்படுவதுடன், அணியின் தேவையை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறார்கள். விராட்கோலியுடன் கருத்து வேறுபாடு இருந்திருந்தால் ரோகித் சர்மாவால் இந்த உலக கோப்பை போட்டியில் 5 சதங்கள் எப்படி அடித்து இருக்க முடியும். இருவரும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அளித்து இருக்க முடியுமா?. வீரர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு உள்ளது. விராட்கோலி, ரோகித் சர்மா இடையே பிளவு நிலவுவதாக கூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணி மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த மாதிரி நன்றாக விளையாடும் அணிக்கு ஆதரவாக எல்லோரும் இருக்க வேண்டியது முக்கியம். அதனை விடுத்து தொல்லை கொடுக்கக்கூடாது. இந்திய அணி இதுபோல் நிலையாக சிறப்பான ஆட்டத்தை அளித்ததை நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது. 1980-களில் வெஸ்ட்இண்டீஸ் அணியும், 2000-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியும் அபாரமாக செயல்பட்டது போல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. அதனை ஏற்கனவே செய்ய தொடங்கி விட்டோம். 20 ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

உலக கோப்பை போட்டி முடிந்ததும் கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியானது. வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு முன்பு தங்களுக்குள் பிரச்சினை எதுவும் இல்லை என்று விராட்கோலி மறுப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்