இலங்கை செய்திகள்

வட மாகாண சபையில் எத்தனை அமைச்சர்கள் என்பதை தெரியப்படுத்துமாறு தவராசா கோரிக்கை

09 Aug 2018

வட மாகாண சபையில் யார் அமைச்சர்கள், எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதனை தெரியப்படுத்தும் வரை அமைச்சர்களுக்குரிய ஆசனங்களை ஒழுங்குபடுத்த வேண்டாம் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண சபையின் 129 வது அமர்வு இன்று வியாழக்கிழமை பேரவை செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

தொடர்ந்தும்  உரையாற்றிய அவர், “அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபை ஒன்றிற்கு முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களிற்கு மேல் இருக்க முடியாது.

ஆனால், இன்று வட மாகாண சபையில் ஆறு அமைச்சர்கள் செயற்படுகின்றார்கள். இந்த விடயம் சீர் செய்யப்படாத நிலையில் ஆளுநர் அமைச்சரவையை கூட்ட வேண்டாமென பிரதம செயலாளரிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எனவே, முதலில் இந்த மாகாண சபையில் யார் அமைச்சர்கள் என எமக்கு முதலமைச்சரினால் தெரியப்படுத்தும் வரை சபையில் அமைச்சர்களிற்குரிய ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்படக் கூடாது.

இதற்கு நிரந்தரமான தீர்வொன்று உடனடியாகக் காணப்பட வேண்டும். இல்லையேல் இந்த சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது  அர்த்தமில்லாத ஓர் செயற்பாடு” என குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்