உலகம் செய்திகள்

வட கொரியாவுக்கான கட்டுப்பாடுகளை விதித்தது சீனா

23 Sep 2017

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரித்து வரும் வடகொரியா தனது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை கைவிட மறுத்து வருகிறது. கடந்த 3-ந் தேதி கூட 6-வது முறையாக அணு ஆயுத சோதனையை அந்த நாடு மேற்கொண்டது. வடகொரியா மேற்கொண்ட சோதனைகளிலேயே இதுதான் மிகப்பெரிய சோதனையாகவும் கருதப்படுகிறது.

வடகொரியாவின் இந்த அடாவடித்தனத்தால் மிகுந்த கோபம் அடைந்துள்ள அமெரிக்கா, வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை, ஒரு தற்கொலை திட்டத்தின் ராக்கெட் மனிதன் என்று கிண்டல் செய்ததுடன், அந்த நாட்டை முற்றிலும் அழித்து விடுவோம் எனவும் மிரட்டினார்.

டிரம்பின் நேரடியான இந்த போர் மிரட்டல் வடகொரியாவுக்கு ஆத்திரத்தை அளித்துள்ளது. இதற்கு பதிலடியாக டிரம்ப் ஒரு ‘பைத்தியக்காரர்’ என கிண்டல் செய்துள்ள கிம் ஜாங் அன், வரலாற்றிலேயே இதுவரைக்கும் கண்டிராத மோசமான பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான வார்த்தைப்போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அத்துமீறி செயல்படுவதால் ஐக்கிய நாடுகள் அவையும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது..

இந்த நிலையில், ஐநா தடைகளின் கீழ், சீனாவுக்கான எண்ணெய் ஏற்றுமதியை குறைக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. வடகொரியாவின் மிகப்பெரும் வர்த்தக கூட்டாளியாக திகழும் சீனா, ஆதரவை மேலும் குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் செயல் வடகொரியாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என தெரிகிறது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதியை ஆண்டுக்கு 2 மில்லியன் பேரல்களாக சீனா குறைக்க உள்ளது.

அதேபோல், திரவப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தை முற்றிலும் நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக சீன வர்த்தக துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்,  தற்போது எவ்வளவு வடகொரியாவுக்கு விநியோகிக்கப்படுகிறது என்பதையும் எவ்வளவு குறைக்கப்படும் என்பதையும் தெளிவாக கூறவில்லை. வடகொரியாவிடம் இருந்து துணிகள் இறக்குமதியையும் தடை செய்ய சீனா முடிவு செய்துள்ளதாகவும் சீன மந்திரி தெரிவித்துள்ளார்.

ஐநா சபை பல்வேறு தடைகள் அடுத்தடுத்து விதித்திருக்கும் நிலையில், ஜவுளி ஏற்றுமதிதான் வடகொரியாவின் மிகப்பெரும் வருவாய் காரணியாக திகழ்ந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV