இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணி இன்று கூடியது

08 Nov 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி நான்காவது தடவையாக இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்று கூடியது.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்தி அம்மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால்இந்த விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டது.

இதனடிப்படையில், இம்முறை இந்த விசேட ஜனாதிபதி செயலணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தியிருந்தது.

மேலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாகவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், முன்னுரிமை அடிப்படையிலான தேவைகள் குறித்து கண்டறிந்து அத்துறைகள் மற்றும் தனிப்பட்ட குழுக்களை இலக்காகக்கொண்டு புதிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கவனம் வெலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் மற்றும் அதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உடனடி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

இதற்கு முன்னர் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்த அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்