இலங்கை செய்திகள்

வடக்கில் ஏ-9 வீதியூடான வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த பிரேரணை

09 Aug 2018

வடக்கில் ஏ-9 வீதியூடான போக்குவரத்தில் இடம்பெறும் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் பிரேரணையொன்று வடக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ-9 வீதியில் வாகனங்களை நிறுத்துவதனை தடை செய்ய வலியுறுத்திய பிரேரணையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வட. மாகாண சபையின் 129 ஆவது அமர்வு இன்று வட. மாகாண சபை பேரவை மண்டபத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது, வட. மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்த அவசர பிரேரணையினை சபையில் முன்மொழிந்தார்.

இதனைக் கருத்திற்கொண்டு, சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் பின்வரும் விடயங்கள் முன்மொழியப்பட்டு விவாதங்களும் முன்வைக்கப்பட்டன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ-9 வீதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

மிகப்பெரும்பான்மையான விபத்துக்கள் ஏ-9 வீதியோரங்களில் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுடன் மோதியதனாலேயே ஏற்பட்ட விபத்துக்கள் போன்ற விடயங்கள் முன்மொழியப்பட்டன.

எனவே குறித்த பிரேரணையில் வாகனங்கள் தரித்து நிற்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ்மா அதிபர், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் ஆகியோருக்கு வலியுறுத்தியுறுத்தப்பட்டுள்ளது.

ஏ-9 வீதியில் பொருத்தமான இடங்களில் வீதிக்கு அப்பால் வாகனத் தரிப்பிடங்களை ஏற்பாடு செய்வதற்கு வட. மாகாண வீதி அதிகாரசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரைகளை முதலமைச்சர் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் தற்செயலாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு 30 மீற்றருக்கு அப்பால் பின்புறமாக சிவப்பு ஒளி வீசும் முக்கோண ஒளிர்திகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் சகல வாகனங்களிலும் இருப்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு வட. மாகாண போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்