உலகம் செய்திகள்

வடகொரியா தலைவரின் அண்ணன் கொலை வழக்கில் பெண் கைது

16 Feb 2017

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன். இவரது அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). இவர்கள் ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்த சகோதரர்கள் ஆவர். இதனால் தந்தையின் மறைவுக்கு பின் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்பதில் இவர்களுக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியில் கிம் ஜாங் அன் ஆட்சிக்கு வந்தார். அதனை தொடர்ந்து தம்பியால் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கிம் ஜாங் நாம் சீனாவில் குடியேறினார். 

இந்த நிலையில், சொந்த வேலை காரணமாக மலேசியா வந்திருந்த கிம் ஜாங் நாம் மீண்டும் சீனா திரும்புவதற்காக கடந்த 13-ந் தேதி தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமானநிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 பெண்கள் கொடிய விஷ திரவத்தில் நனைத்து எடுத்த ஊசியை கொண்டு அவரை குத்தி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

 இந்த கொலையில் தொடர்புடைய 28 வயதான இளம்பெண் ஒருவர் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட்டுடன் நேற்று முன்தினம் மலேசிய போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து போலீசார், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், கொலையில் தொடர்புடைய மற்றொரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டார். 

அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த பெண் இந்தோனேசிய பாஸ்போர்ட்டு வைத்திருந்ததாக கூறிய போலீசார் அவரது பெயர், வயது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். அவரது காதலரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும், இந்த கொலையில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்