உலகம் செய்திகள்

வடகொரியாவில் அணு கதிர்வீச்சு அபாயம்

02 Nov 2017

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 200 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில் ஜப்பான் இது குறித்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த விபத்தானது காற்றில் அணு கதிர்வீச்சை கலப்பதாகவும் அதிர்ச்சி தகவலை ஜப்பான் வெளியிட்டுள்ளது.

அது மட்டுமின்றி எதிர்வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் ஜப்பானின் வடக்கு பகுதி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் அந்த நாடு அச்சம் தெரிவித்துள்ளது.

மேலும், விபத்து நடந்த பகுதியில் பணியில் இருந்த ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தற்போது அணு கதிர்வீச்சு தொடர்பான சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஜப்பான் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 10 ஆம் தேதி குறித்த சுரங்கப்பாதையானது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி மடிந்தனர்.

குறித்த பகுதியானது வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தும் விசேஷ தளமாகும்.

சம்பவத்தன்று வடகொரியா இன்னொரு ஏவுகணை சோதனைக்கு தயாராகவே அந்த சுரங்கப்பதை இடிந்து விழுந்தது.

அச்சமயம் காற்றின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததாகவும், அணு கதிர்வீச்சு ஏற்பட்டால் கூட அது தங்களது எல்லையை கடக்காது என்ற திட்டத்துடன் வடகொரியா செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது வானிலை திடீரென்று மாறியதால் காற்றின் வேகம் அதிகரித்து வருவதாகவும், இதனால் அணு கதிர்வீச்சு எதிர்வரும் நாட்களில் ஜப்பானின் முக்கிய நகரங்கள் வரை சென்று தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பான் ஏற்கனவே அணு உலைகளாலும், இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணு குண்டாலும், சுனாமியால் ஏற்பட்ட அணு விபத்துகளாலும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில்,

தற்போது வடகொரியாவில் இருந்து எழுந்துள்ள அணு கதிர்வீச்சையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV