கனடா செய்திகள்

ரொறன்ரோ பெண் ஒருவர் TTC மீது வழக்கு

13 May 2022

கனடாவில் பரபரப்பான சுரங்கப் பாதை ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட ரொறன்ரோ பெண் ஒருவர் TTC மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், தமக்கு ஏற்பட்ட விபத்தை தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தம்மை மீட்க முயற்சி முன்னெடுத்தவர்கள் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட Shamsa Al-Balushi என்ற பெண்மணி தெரிவிக்கையில், விபத்து நடந்த பின்னர், தொடர்புடைய பகுதிக்கு வரும் ரயிலை நிறுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இரு ரயில்களுக்கு நடுவே சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும், இழப்பீடாக 1 மில்லியன் டொலர் அளிக்கவும், அத்துடன் சட்ட போராட்டங்களுக்கான செலவீனங்களும் அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், ஷம்சாவை ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டவர் TTC ஊழியர் அல்ல என்றபோதும் TTC இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என ஷம்சாவின் சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

ஷம்சா மீதான தாக்குதல் தொடர்பில் 45 வயதான ரொறன்ரோ பெண்மணி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

மட்டுமின்றி, குறித்த சம்பவத்தில் விலா எலும்புகள் பல உடைந்து, கழுத்து மற்றும் புறமுதுகு காயங்களுடனும் மீட்கப்பட்டு ஷம்சா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், விபத்திற்கு முன்னர் மூன்று வாரங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்ட அவர், புதிய வேலையில் உறுதி செய்யப்படாத நிலையில் ஷம்சா விபத்தில் சிக்கியதால், எந்த உதவியும் அலுவலகம் சார்பில் பெற முடியாமல் போயுள்ளது.

மேலும், சொந்தமாக அவருக்கு வாகனம் ஏதும் இல்லை என்பதால், அவர் கட்டாயம் TTC சேவையை நம்பியிருக்கும் நிலை உள்ளது என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam