கனடா செய்திகள்

ரொரன்ரோ துணை நகரபிதா காலமானார்

09 Jul 2017

ரொரன்ரோ நகரசபை உறுப்பினரும் துணை நகரபிதாவுமான பாம் மக்கொனல் மிக மோசமாக நோய்வாய்ப்ப்டடிருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த செய்தியை ரொரன்ரோ நகரமன்றில் வைத்து நகரபிதா ஜோன் ரொறி நேற்று பிற்பகல் வெளியிட்டுள்ளார்.

அவருடைய சுவாசப்பை தொடர்பான ஒரு நோய் காரணமாக, பாம் மக்கொனல் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரால் வழங்கப்பட்ட சேவைகளுக்கும் ஆலோசனைகளுக்குமாக ரொரன்ரோ நகரம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், அவரின் இழப்பு நகரசபை உறுப்பினர்கள், நகரப் பணியாளர்கள், மக்கள் என அனைவருக்கும் பேரிழப்பு எனவும் நகரபிதா ஜோன் ரொறி கூறியுள்ளார்.

ரொரன்ரொ நகரின் மிகவும் இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் அவர் மிகவும் காத்திரமான ஆலோசகராக திகழ்ந்துள்ளார் எனவும், மறைந்த பாம் மக்கொனலுக்கு நகரபிரதா ஜோன் ரொறி புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்று நாம் அனைவரும் அவரை இழந்துள்ள போதிலும், அவர் ரொரன்ரோ நகருக்காக ஆற்றிய பணிகளும், வழங்கிய சேவைகளும், தெரிவித்த ஆலோசனைகளும் எப்போதும் ரொரன்ரோவை பலமாகவும், நீதியாகவும் வைத்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவரின் மறைவை அடுத்து ரொரன்ரொ நகரமன்றம் உள்ளிட்ட ரொரன்ரோ முழுவதும் உள்ள நகர நிர்வாக அலுவலக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளதுடன், அவரது இறுதி நிகழ்வுகள் முடியும் வரையில் கொடிகள் தொடர்ந்து அரைக் கம்பத்திலேயே பறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொரன்ரொ மத்தி – றோஸ்டேல் தொகுதிக்கான நகரசபை உறுப்பினராக கடமையாற்றிய பாம் மக்கொனல், கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து ரொரன்ரோ நகரசபை உறுப்பினராக சேவையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV