கனடா செய்திகள்

ரொரன்ரோவில் நேற்று 20 பேர் இடம்பெயர்வு

14 Jul 2017

ரொரன்ரோவில் நேற்று இரவு கட்டிடம் ஒன்றின் கூரைப் பகுதி இடிந்து வீழந்த சம்பவத்தினை அடுத்து சுமார் 20 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கல்லூரி வீதிக்கு தெற்கே ஸ்பாடீனா அவனியூவில், கட்டுமான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருநத, எவரும் வசிக்காத கட்டிடம் ஒன்றிலேயே நேற்று இரவு ஏழு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் இன்று காலையில் தகவல் வெளியிட்டுள்ள ரொரன்ரோ தீயணைப்பு படை அதிகாரி, குறித்த அந்த வீட்டின் கூரைப் பகுதி இடிந்து வீழந்துள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் இரு பகுதியிலும் உள்ள வீடுகளில் வசித்த சுமார் 20 பேர் வரையானோர் நேற்று இரவே பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

குறித்த அந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பாதிப்பு அருகில் உள்ள கட்டிடங்களு்க்கும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த கட்டிடத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக பொறியியலாளர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு்ளளதாகவும், அந்தக் கட்டிடத்தினை மீளவும் பாதுகாப்பானதாக அமைப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது எவரும் காயமடையாத நிலையில், இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளை செஞ்சிலுவைச் சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மேலும் சில நாட்களுக்கு தமது வீடுகளுக்கு திரும்பமுயடிதிருக்கும் என்று கருதப்படுகிறது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்