இந்தியா செய்திகள்

ரூபா பணியிட மாற்றம் நிர்வாக ரீதியிலானது: சித்தராமையா

17 Jul 2017

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் (அம்மா அணி) சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார்.

இது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும், டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இது மாநில அரசுக்கும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிறைத்துறை நிர்வாகம் மீதும், அதிகாரிகள் மீதும் ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வரும் டி.ஐ.ஜி. ரூபாவை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் மாநில அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இன்று ரூபா திடீர் என பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை பொறுப்பில் இருந்து பெங்களூர் நகர போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

ரூபா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா இவ்விவகாரம் குறித்து கூறியதாவது:- : ” ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது துறை ரீதியிலான நடவடிக்கை ஆகும். அனைத்தையும் ஊடகங்களில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது” என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்