உலகம் செய்திகள்

ரஷிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியா திரும்பினார் கிம் ஜாங் அன்

18 Sep 2023

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் ரஷிய அதிபர் புதினை சந்திக்க உள்ளதாக சில நாட்களாகவே கூறப்பட்டு வந்தது. அதன்படி கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ரஷியா சென்றார். கொரோனா ஊரடங்குக்கு பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அப்போது அவருடன் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர்.

ராணுவத்தை நவீனமயமாக்க முயற்சி

இந்த பயணத்தில் அதிபர் புதின், ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு மற்றும் பிற ராணுவ உயர் அதிகாரிகளை கிம் ஜாங் அன் சந்தித்து பேசினார். இதனையடுத்து விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவ தளத்துக்கு அவர்கள் சென்றனர். அப்போது தங்களது ராணுவ திறன்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து ரஷிய ராணுவ அதிகாரிகள் கிம் ஜாங் அன்னுக்கு விளக்கம் அளித்தனர். அதேபோல் ரஷியாவின் முக்கிய விண்வெளி தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிட்டார். இதன் மூலம் தனது ராணுவத்தை நவீனமயமாக்க முயற்சிப்பதாக தென்கொரியா குற்றம்சாட்டி வருகிறது.

உலக நாடுகளுக்கு அழைப்பு

மேலும் ரஷியாவுக்கு ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம், ராணுவத்துக்கு இடையேயான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்தநிலையில் கிம் ஜாங் அன் தனது ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார்.

கிம் ஜாங் அன்னின் இந்த பயணத்தினை தென்கொரியா கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கூறுகையில், `ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம் குறித்து வடகொரியா பேச்சுவார்த்தை நடத்தியது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிரானது. எனவே வடகொரியா-ரஷியா இடையே பெருகி வரும் இந்த ராணுவ ஒத்துழைப்பை சமாளிக்க ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்' என மற்ற உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam