இந்தியா செய்திகள்

மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்

11 Feb 2019

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க விஜயவாடாவுக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் விமானப்படை சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் குண்டூர் சென்றார்.

அங்கு நடந்த விழாவில், பெட்ரோலியம் எரிவாயு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், ‘‘சந்திரபாபு நாயுடு என்னை விட அரசியலில் மூத்தவர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் கட்சி விட்டு கட்சி தாவுவதிலும் அவர் தான் அனைவருக்கும் மூத்தவர். சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக திட்டமிட்ட நிதியை விட கூடுதலாக ஆந்திராவுக்கு மத்திய அரசு வழங்கியது. ஆனால் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு அதை முறையாக பயன்படுத்தவில்லை’’ என குற்றம்சாட்டினார்.

முன்னதாக விஜயவாடா விமான நிலையத்துக்கு வந்த மோடியை, ஆந்திர மந்திரிகள் யாரும் சென்று மரியாதை நிமித்தமாக வரவேற்கவில்லை. மேலும் விஜயவாடா, குண்டூர் உள்பட பல இடங்களில் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ‘மோடி திருப்பி போ’ என கோ‌ஷமிட்டனர்.

இதேபோல் கம்யூனிஸ்டு கட்சியினரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். மோடி வருகையை கருப்பு தினம் என காங்கிரஸ் கட்சி வர்ணித்தது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்