இந்தியா செய்திகள்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது!

10 Aug 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த முயன்ற போது கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையான திருமுருகன் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து  மத்திய அரசுக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில், தேசதுரோக வழக்கின் கீழ்  இன்று (ஆகஸ்ட் 9 வியாழக்கிழமை) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை தேனாம்பேட்டையில் போராட்டம் நடத்தினார்.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த முயன்ற போது திருமுருகன், காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சி நிர்வாகிகளான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

நான்கு மாதங்கள் சிறையில் இருந்த இவர்கள், சென்னை உயர்நீதிமன்றின் உத்தரவின் பேரில் விடுதலை ஆனார்கள். இதுதவிர மேலும் பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இவர் வெளிநாடு சென்றுவிட்டார். ஜேர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசினார். பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேசிவிட்டு நோர்வேயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய பொலிசார் கைது செய்தனர்.

இதுகுறித்து தமிழக உள்துறைக்கும், சென்னை நகர பொலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சென்னை நகர பொலிசார் அவரை அழைத்து வர பெங்களூர் விரைந்து உள்ளனர். திருமுருகன் காந்தி சென்னை அழைத்து வரப்பட்ட பிறகு அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திவிட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்