உலகம் செய்திகள்

மெக்சிகோவில் நிலச்சரிவில் புதைந்து ஒரே குடும்பத்தின் 7 பேர் பலி

12 Jul 2019

மெக்சிகோ நாட்டில் ஜூன் தொடங்கி அக்டோபர் வரை மழை காலம் ஆகும்.  அந்நாட்டின் மத்திய பகுதியில் சான்டோ தோமஸ் சவுத்லா பகுதியில் மலையை ஒட்டி பல வீடுகள் அமைந்துள்ளன.  அதனை அடுத்து குறுகலான ஆறு ஒன்றும் ஓடுகிறது.  இந்நிலையில், தங்களது குழந்தைகள் தொடக்க பள்ளியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றதற்காக அதனை விழாவாக கொண்டாட ஒரு குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.  இதற்காக இந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அவர்கள் ஒன்றாக கூடியுள்ளனர்.

இதனிடையே தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அந்த பகுதியில் உள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.  இந்த சம்பவத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வீடும் மண்ணில் புதைந்துள்ளது.  இதில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்து அதிகாரிகள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  அங்கு இருந்த 2 குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து உள்ளனர்.

தொடர்ந்து இங்கு அதிகளவில் மழை பெய்ய கூடும் என்பதனால் நிலச்சரிவுகளில் இருந்து காப்பதற்காக இரண்டு வீடுகளில் வசித்தவர்களை அவர்கள் வெளியேற்றியுள்ளனர்.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்