வரலாறு செய்திகள்

முள்ளிவாய்க்கால் மே 18 - திட்டமிட்ட தமிழர் இன அழிப்பு

18 May 2022

முள்ளிவாய்க்கால் மே 18 - திட்டமிட்ட தமிழர் இன அழிப்பு

தமிழீழ மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் வாழும் உரிமை இல்லாத ஓர் இடமாக யுத்த வெறி பிடித்த தேசமாக உலகமே வேடிக்கைப் பார்க்க நிகழ்த்திக் காட்டிய இனப்படுகொலையை கொடூர தேசம் இன்று 13 வருடங்கள் கடந்துபோயுள்ள நிலையிலும் எமக்கான நீதி கிடைத்தபாடில்லை;  தமிழர்கள் நான்கரை லட்சத்திற்கும் மேல்  ஒரு குறுகிய பகுதிக்குள் முடக்கப்பட்டு சர்வதேசத் வல்லரசு சக்கிகளுடன் இணைந்த பௌத்த சிங்கள அரச படைகள் சர்வதேச பேர் விதி மீறல்களை மீறி தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான  உறவுகளின் பிணங்கள் வீதிகள் எங்கும் கிடப்பதை பார்த்த பச்சிளம் பாலகர்கள் முதல் பல் விழுந்து பொல்லூன்றும்  முதியவர்களுக்கும் இனப்படுகொலையின்  ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமை காத்து நிற்கின்றனர்.  மே 18 என்பது தமிழ் ஈழத்தின் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார இன அழிப்பின்  கறை படிந்த நாட்கள்.  இலங்கை அரசு  அதன் சொந்த குடிமக்களுக்கு எதிராக திட்டமிட்ட இனவழிப்பு. அகிம்சை போராட்டம் மற்றும் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட தமிழர்கள் முன்வைத்த நியாயமான அரசியல் கோரிக்கைகளை நிராகரித்து சிங்கள பேரினவாத அரசாங்கம் இனப்படுகொலையைத் தொடங்கியது.         

இனப்படுகொலை (genocide) என்ற வார்த்தையை முதன் முதலில் ரபேல் லேம்கின் என்பவர் 1944ல் வெளிவந்த 'Axis Rule in Occupied Europe' என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார். உலகில் ஆர்மேனியன் இனப்படுகொலை – Armenian Genocide, கிரேக்க இனப்படுகொலை, பெரும் இன அழிப்பு (2ஆம் உலகப் போரில் யூதர் இனப்படுகொலை) Holodomor இனப்படுகொலை, கம்போடியா இனப்படுகொலை, Communist genocide, ருவாண்டா இனப்படுகொலை, போசுனியன் இனப்படுகொலை, குர்துமக்கள் இனப்படுகொலை, தார்பூர் போர் இனப்படுகொலை போன்ற பல நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் வேறுபட்டவை. முன்னைய இனப்படுகொலைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட சர்வதேச சமூகம் இப்படியான கொடூரங்கள் இனிமேலும் எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு மனித உரிமைகள் பொறிமுறைகளை ஏற்படுத்திய பின்னரே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்றது. ஆகவே சட்டங்கள் ஓரளவு வலுவாக இருந்த போதே இந்தப் பேரவலம் நடந்தேறியது. இந்த வரிசையில் உலகில் இறுதியாக நடந்த மாபெரும் இனப்படுகொலையையாக ஈழத் தமிழர் இனப்படுகொலை. போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள்.  தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்திசர்வதேச அளவிலான இராணுவ சக்தியுடன் கைகோர்த்து  தமிழ்ர்களை படுகொலை செய்தார்கள்.

சிங்கள ஆக்கிரமிப்பு ஆயுதப்படைகளின் முழு நோக்கம் தமிழ் சமூகத்தையும் முற்றிலுமாக அழிப்பதை நோக்காகக் கொண்டு 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2009 மே மாதம் இறுதி வாரம் வரை வரை பௌத்த சிங்கள பேரினவாத அரசு தழிழ்மக்கள் மீது சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் பல உள்ளது. போரின்போது கொத்து குண்டுகளால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் நடைபிணச் சாட்சியாக உள்ளனர். இன்றும் கூட உண்மையான சான்றுகளாய் கொத்து குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், நச்சு வாயு மற்றும் கிளஸ்டர் குண்டுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என அரசின் பாதுகாப்பு வலையங்களை இலக்குவைத்து தாக்கியதற்கான ஆதரங்களும் உள்ளது.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணித்தமை நினைவுக்கு வருகின்றது. சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றிவிட்டு சாட்சி இல்லா யுத்தம் ஒன்றை நடத்திட திட்டமிட்டு அரங்கேற்றிய சிங்கள அரசு போர்க்கோட்பாட்டு வரையறையின் பின்னர் உலகம் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்டது. மனித அழிவுகளோ மனித அவலங்களோ ஏற்படாத போர்நெறிகளே சனநாயக உலகின் அறக்கோட்பாடு. அப்பவிப் பொது மக்கள்மீது விஷவாயுக் குண்டுவீச்சு, பாஸ்பரஸ் கொத்துக்குண்டு வீச்சு, ஏவுகணை எறிதல், கனரக ஆயுதப் பிரயோகம் போன்ற கொலைக்காரியங்களைத் தவிர்ப்பது, மக்கள் வாழுமிடங்கள், வழிபடும் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் போன்ற மக்கள் திரளும் பகுதிகள் தாக்கப்படக் கூடாது போன்றவை நிகழ்காலத்தினது போர்நெறி. இலங்கையில் எல்லா வகையிலும் இவை மீறப்பட்டன. வயிற்றில் இருக்கும் சிசுக்கள் பிறந்த குழந்தைகள் முதல் சிறார்கள் வரை  பயங்கரவாதிகள் என்ற சாயம் பூசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

 

 பயங்கரவாதிகளை ஒழிப்பது என்னும் போர்வையில் ஓரினத்தை அழிக்கும் முயற்சி - இந்நிகழ்ச்சி நிரலின் முதலும் முற்றானதுமான நோக்கம். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. பன்னிரண்டு வயதுச் சிறுமி முதல் பெண்கள் பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்டனர். 'வன்னியிலிருந்த எல்லா மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு இலக்காகின. பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் கனரக ஆயுதம் பயன்படுத்தப்படாது என ராணுவம் உறுதியளித்திருந்தது. எனவே பல இடங்களிலும் சிதறிக்கிடந்த மக்கள் பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் குவிந்தபோது குண்டுவீசி அழிக்கப்பட்டார்கள்.

ஓவ்வொரு  நாளும் இன அழிப்புக்களின் போதும் ஒவ்வொரு இடங்கள் அந்த  இன அழிப்பின் அதியுச்ச அடையாளங்களாக பதிவாகின்றன. அவ்வாறே தமிழின அழிப்பின் தடயமாகிப்போன முள்ளிவாய்க்கால் என்ற  பெயரை  உலகமே உச்சரித்து விட்டது.  புதுக்குடியிருப்பு  பெருநிலப்பரப்பிலிருந்து நந்திக்கடல் காரணமாக பிளவாகியுள்ள குடா வடிவிலான மணற்பாங்கான பிரதேசமாக  காணப்படும்  சாளை தொடக்கம் வட்டுவாகல்  வரையான நீள்சதுரத்தை ஒத்த  நிலப்பரப்பில் முள்ளிவாய்க்கால் காணப்படுகிறது. சரித்திர  மண்ணிலிருந்து கூலியே கூப்பாடாகி போடாமல்  குண்டுமழை குளித்திட்ட  மகா யுத்தத்தின்  காரணமாக உளவியல் பாதிப்புக்குள்ளாகி தற்போது ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள 60 வயதுடைய  மேரி லூபினா என்ற அன்னை கூறுகையில் 2009 ஆரம்பத்தில்  நாள் சரியாக  ஞாபகம் இல்லை  ஒரு நல்ளிரவு  வேளையில்  பொருட்களை எல்லாம்  ஏற்றிக் கொண்டு  தேவிபுரம் பிரதேசத்துக்கு  இடம்பெயர்ந்தோம். அங்கு  பொருட்களை  இறக்கி  நிலைப்படுத்தி ஒரு இரண்டு  வாரம் இருந்தோம். தேவிபுரம் பகுதியில் எறிகணை விழத் தொடங்கின. 2009 தை மாதம் இறுதியில்  தேவிபுரம்  சுதந்திரபுரம்  ஆகிய பகுதிகளில்  மக்கள் பெருமளவில்  கொல்லப்பட்ட காலம். ஏறிகணைகள்  மிக  அருகில்  விழுந்து  கொண்டிருந்ததால்  அங்கு  இருக்க முடியாத  நிலையை  உணர்ந்து  வலைஞர்மடம் பிரதேசத்துக்கு  இடம்பெயர்ந்தோம். இடம் பெயர்ந்து  செல்லும் போது  வீதியெங்கும்  மக்கள்  அந்த  நெரிசலுக்கு மத்தியில் வீதிகளில்  எறிகணைகள் வீழுந்து வெடித்துக்கொண்டிருந்து.

அவ்வாறு  இடம்பெயர்ந்து  செல்லும் போது  புதுக்குடியிருப்புக்கு  மிக  அருகில்  வீதியில்  எமக்கு முன்னால்  100அடி தூரம் அளவில் எறிகணை விழுந்து 100 இற்கும்  அதிகமானவர்கள்  உடல் சிதறிப்  பலியாகிப் போனார்கள். வாகனங்கள்  பற்றி  எரியத்தொடங்கின. எல்லோரும் வீதிகளில் படுத்துக்கொண்டார்கள் யாரும்  யாரையும்  காப்பாற்ற முடியாத நிலை. இயக்கம் காயமடைந்தோரை  வைத்தியசாலைக்கு ஏற்றினார்கள். நாங்கள் தொடந்து அங்கு இருக்கமுடியாமல் பேயிற்று போக்குவரத்தை நெருசல் எங்க பாத்தாலும் அழுகுரல் தான் நாங்கள் குறுக்கு வழியூடாக ஒரு மாதிரி வலைஞர்மடத்திற்கு வந்து அங்கும் ஒரு இடத்தில் கூடாரம்  அமைத்து  ஒரு கூட்டுக் குடும்பமாகவே இருந்தோம். அங்கு  எறிகணைகள்  ஏராளமாக விழுந்தபோதும் வேறு  எங்கு இடம் பெயர்ந்து  செல்வதென்று  தெரியாத  நிலையில் அங்கேயே  இருந்தோம் காப்பழிக்கடியில் தான் எங்கள் வாழ்க்கை  வெளியே செல்லமுடியாத நிலை இரவில்  எறிகணைகள் சற்று ஓரளவு ஓய்வாகும் போது கஞ்சி கொஞ்சம் காச்சி வைத்துக் கொள்ளுவோம். அவ்வாறு  சாப்பாடு  இல்லாமல் போனாலும்  பறவாயில்லை என்று காப்பழியை  விட்டு வெளியே  செல்வதே இல்லை. அவ்வாறு இருந்தும்  குடிப்பதற்கு  நீர்  இல்லாத நிலையில் நீர்  எடுக்கச்  சென்ற  எனது  மருமகன் காலில்  காயமடைந்து  விட்டார். அவருக்கு  அவ்வளவு  பெரிய காயம்  இல்லை  என்பதால்  இயக்கம்  சிகிச்சை  அளித்து மீண்டும்  எங்களிடம்  ஒப்படைத்தார்கள். பங்குனி மாதம் ஒருநாள் எங்களுக்கு அருகில் செல் வந்து விழுந்ததில்   ஒரு கைக்குழந்தை காயப்பட்டு துடிதுடித்து இறந்து போனது இன்றுவரையும் மறக்க முடியாது என அவருடைய கொடிய நாட்களை பகிர்ந்தார்.

வடபுலத்தை  ஊடறுக்கும்  ஏ9 யாழ் - கண்டி  வீதியின்  அருகாமையாக வவுனியா மாவட்டத்தை  பிரதிநித்துவம் செய்கின்ற  கனகராயன் குளம்  பிரதேசத்தின்  பெரியகுளம் என்கின்ற  கிராமத்தில்  வசித்துவரும்  பிறேம்குமார்  அரசம்மா  கூறுகையில்  ஈழப்போருக்கு  முன்பு  எனது கணவர்  எங்களோடு இருந்த காலத்தில் விவசாயத்தோடு சுகமான மகிழ்ச்சியான வாழ்க்கை  அழகான சிறியகுடும்பமாக  நன்றாக வாழ்ந்த நாட்கள் இன்னும்  நினைவலைகளில்  வந்து போகின்றன. அன்பான அந்த உறவோடு  இல்லற வாழ்க்கை  36 வயது  வரைதான்  நீடிக்கும் என்று கனவிலும்  நினைத்துப்பார்கவில்லை. 2008 ஆம் ஆண்டு கனகராயன் குளத்தை விட்டு  இடம்பெயர வேண்டிய  நிலை ஏற்பட்டது. படிப்படியான இடப்பெயர்வுகள்  பல்வேறு  இன்னல்கள்  தொடர்ந்தவாறே இருந்தன .  இடப்பெயர்வுகள்  சர்வ சாதாரணமாகிப் போனதினால் கணவரும்  நானும்  இரண்டு பிள்ளைகளும்  எறிகணைகள் விழும்போது  ஒன்றாகவே  இருப்போம்.  இறந்தால் குடும்பமாக இறப்போம்  ஒருவர் இல்லாமல்  துண்பப்படும் நிலை  மற்றவர்களுக்கு  வரக்கூடாது  என்று  கணவர்  அடிக்கடி  கூறுவார் . இறுதியில்  அவர் எங்களைவிட்டு  ஏனோ தனியாக சென்றுவிட்டார்.

2009 தை மாதம் 29ம்திகதி ஒரு வெட்ட வெளிக்குள் அனாதியற்று நின்ற உணர்வு சிறிலங்க அரசு பாதுகாப்பு வலயங்கள் என  பிரகடணப்படுத்தியிருந்த இடங்களில் உள்ள கோவில், பாடசாலை, மரத்தடி, மாவீரர் படிப்பகம் உறவினர் வீடு, வீதியோரம் என கால் கடுக்க நடந்து களைப்பாறிட பின்னர் அதுவே தற்காலிக குடியிருப்பு பிரதேசங்களாக மாறிவிட்டன.  இடம்பெயர்ந்து 2009 இன்  ஆரம்பத்தில்  மூங்கிலாறு  பகுதியில் கூடாரம்  அமைத்து  இருந்தோம்.  மிகுந்த சன்னச் செறிவு  ஏவுகின்ற  ஒவ்வொரு  எறிகணைகளும்  யாரோ  ஒருவருக்கு  மேல்  விழுகின்ற  நிலை  காணப்பட்டது. பெற்றோரை தவறவிட்ட குழந்தைகள். முதியவர்களைத் தவறவிட்ட உறவினர்கள். என உறவினர்களைத் தேடி அலைந்தவர்களின் அவஸ்தை சொல்லிமாளாது.

முப்படைகளும் கொட்டிய குண்டுகளில்  யாரும் எந்த இடத்திலும்  நிலையாக இருக்க முடியாத நிலை மூங்கிலாறு பகுதியில்  மிகவும்  செறிவாக  எறிகணைகள்  விழத்  தொடங்கின. நகரக்  கூட முடியாது வாகன நெரிசலும், அய்யோ, கடவுளே, என்ற அழுகுரல்கள், தான் எங்கும். அங்கு இருப்பது  பாதுகாப்பு  இல்லை  என்பதை  உணர்ந்தோம். எமது கூடாரத்துக்கு  மிக அருகில் எறிகணைகள்  விழுந்து  இரண்டு குடும்பங்கள்  குடும்பமாகவே  இறந்துபோனார்கள். . எங்கும் வெடி நாற்றம். கந்தகம் சூழ்ந்திருந்த காற்று சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டோம்.  04.02.2009 காலையில்  எனது கணவர்  தான் உடையார்கட்டுப் பக்கம்  சென்று  இடம்பெயர்ந்து  போவதற்கு  ஒரு நல்ல இடத்தை  பார்த்து வருவதாகவும் எங்களை பாதுகாப்பாக பதுங்குழிக்குள்ளே இருக்கும்படியும்  கூறிச்சென்றார். அன்றும் வழமைபோலவே தெற்கே எறிகணைகள் ஏவப்பட்டன. உடையார்கட்டுப்பக்கம்  வழமையைவிட அதிகமாக எறிகணைகள் விழுந்து வெடிப்பதை உணர்ந்தேன்.

எனது உயிரே என்னிடமில்லை  அப்போது தொலைபேசி தொடர்புகள் ஏதும்  இல்லையென்பதால்  திரும்பி வரும்வரை  நாம்  எந்த  நிலையையும் அறிய முடியாது . ஏக்கம்  மட்டும்  எஞ்சியிருந்தது. மாலையாகும் போது ஏராளமான மக்களைக் கொன்றுவிட்ட களைப்பிலும் களிப்பிலும் எறிகணைகள்  சற்று  ஓய்ந்திருந்தன. பிள்ளைகளும்  அம்மா அப்பா  ஏன் இன்னும் வரவில்லை  என்ற கேள்வியை  அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தார்கள். என்  கணவர் திரும்பி வரவில்லையே  என்ற விடயம் மட்டுமே மனதில் படமாக ஓடிக்கொண்டிருந்தது. இருந்தாலும்  பிள்ளைகளுக்கு  என்  ஆழ்ந்த கவலையையும் ஏக்கத்தையும் மறைத்து  தெம்பினைக் கொடுக்க முயற்சித்தேன். எமக்கு அருகில்  உறவினர்களும் இருந்தார்கள். எல்லா  உறவினர்களுக்கும் ஏன் வரவில்லை அவருக்கு என்ன ஆனது ஏன் நீ அவரை  தனியாக  அனுப்பினாய்  என்று தொடர்ச்சியாக  கேள்விகளைத்  தொடுத்து என்னை படபடப்பில்  ஆழ்த்தினார்கள். அன்று இரவு முழுவதும்  எனக்கு நித்திரை  வரவில்லை .இருட்டி  விட்டதால்  கணவர்  வரவில்லை  நாளை காலையில்  வருவார்  என்று  என்னை  சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும்போதே  பொழுதுவிடிந்துவிட்டது.

05.02.2009 அந்த நாள்  எல்லா நாட்களையும் போலவே விடிந்தது 2009 இல் அதிகமான நாட்கள் பலருக்கு கறுப்பு விடியலாக புலர்ந்ததை என்னைப்போலவே அவர்களும் அடையாளம் கண்டிருக்க வாய்ப்பில்லை. காலையில் கூடாரத்துக்கு அருகில்  இருந்த மரத்தடியில்  குழந்தைகளுக்கு  தேனீர்  கொடுக்க அடுப்பை மூட்டிக்கொண்டிருந்தேன். ஏங்கள் கூடாரத்தை நோக்கி தெரிந்த நபர் வந்து கொண்டிருந்தார்.அவர்  வரும்போது  எனக்குள் இவர் கணவரைப்பற்றிய ஏதோ  செய்திதான்  கொண்டுவருகிறார் என்று  எண்ணம் வந்தது. என்னை அறியாமலே எனக்கு படபடப்பு எங்களுக்கு மிக அருகில் வந்த நபர் தாழ்வான குரலில்  அக்கா பிறேம் அண்ணா நேற்று(04.02.2009) உடையார்கட்டில் எறிகணை வீழ்ந்து  இறந்துவிட்டார் என்று கூறினார். எனக்கு என்ன செய்வதென்றே  தொரியவில்லை. அழுது புலம்பி மயக்கமடைந்து  விட்டேன் . குழந்தைகளும்  கதறினார்கள் . அருகில்  உறவினர்கள்  இருந்ததால்  எல்லோரும்  ஒன்றாக  இருந்து  அழுது புலம்பினார்கள். அழுது கதறி என்னால்  இயலாமல் போய்விட்டது.  எனது கணவர்  எங்களை விட்டுப் பிரிந்ததை  என்னால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. உறவினர் ஒரிருவர் மட்டும் உடையார்கட்டுக்குச் சென்று அங்கே  கவனிப்பாரற்று  வீதியோரம்  கிடந்த எனது  கணவரின்  உடல்  கீலங்களை பதுங்குழி ஒன்றினுள் போட்டு  மூடிவிட்டு  வந்தனர். அன்று  நிகழ்ந்த  அந்த  துயர  சம்பவத்தில்  இருந்து  இன்னும்  தான் நான் மீளவில்லை தந்தையை நினைத்து  நெஞ்சில்  அடித்துக் கதறி  எனது மகனும்  இதயம் பலவீனமானவராக மூளை பாதிக்கப்பட்டவராக  வெறும் நடைபிணமாக  இன்று வரை இருக்கிறான். சிறிலங்கா  இராணுவத்தின்  எறிகணை வீச்சில்  தனது  கணவரை  இழந்து தவிக்கும்  இந்த அம்மாவின்  மகனும்  உளவியல்  ரீதியாக  பாதிக்கப்பட்டிருக்கும்  நிலையில் தோட்டச்செய்கை மூலம்  வாழ்வாதாரத்தை  நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் .

இனப்படுகொலையின் கொடூரமான அலறல்கள், உதவியற்ற உணர்வு, பயங்கரமான மரணங்கள் மற்றும் காயமடைந்தவர்களின் துன்ப துயரங்கள்  வேதனை கவலை மற்றும் அழுகை ஆகியவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளும் போது  அரசாங்கத்தின் அடக்குமுறையின் நாளந்தம் நடந்தேறிட  இனப்படுகொலைகள் நினைவிற்கு வருகிறது. 04-02-2009 புதன்கிழமை அன்று சிறிலங்கா படையினர் இடம் பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்  நடத்திய எறிகணை தாக்குதல்களில் 13 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்தார்கள். அதேவேளை, மருத்துவமனைகளுக்கு கொல்லப்பட்டவர் பலரின் உடலங்கள் அடயாளம் காணப்படவில்லை. தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்  காரணமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் போக்குவரத்திற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டது.

08-02-2009அன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொது மக்களை இலக்க வைத்து சிறிலங்கா படையினர் நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில் - 72 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 198 பேர் காயமடைந்தார்கள். தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருந்தது சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது அன்று காலை 10 மணியில் இருந்த பிற்பகல் 3 மணிவரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் இரண்டு மைல் நீளம் தூரத்துக்கு - மிகச் செறிவாக - பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது, சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி வட்டமிட்டு நோட்டம் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த பீரங்கித்தாக்குதல் நடத்தப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர ஊர்திகளிலும் மற்றும் நடந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த வேளையில் பொது மக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்கியிருந்தார்கள்.

சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் என பெருமளவு தமிழர்கள் உடல் சிதறிக் கொல்லப்பட, மேலும் பெருமளவிலனோர் படுகாயமடைந்து வீழ்ந்த பெரும் அவலம் அங்கு நிலவியது. கொல்லப்பட்டவர்களது உடல்களையோ, அல்லது காயமடைந்து வீழ்தோரையோ மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினர் தொடர்ந்து கடுமையான பீரங்கி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தனர், இதனால் காயமடைந்தோரை மீட்க முற்பட்டவர்களும் காயங்களுக்கு உள்ளாகி வீழ்ந்தனர். பிற்கல் 3:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் ஓய்ந்த பின்பு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட போது - காயமடைந்த பலர் இறந்து போயிருந்தனர். இறந்தவர்கள் போக, காயமடைந்த நிலையில் இருந்த 198 பேர் மீட்கப்பட்டனர். காயமடைந்தோர் பலர் மீட்கப்பட்ட போதும் மருத்துவமனைகள் எதுவும் வன்னியில் இல்லாத நிலையில் - மரங்களின் கீழும், கொட்டகைகளின் கீழம், வெறும் பாய்களின் மீது வைத்தே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. ஊர்திகள் பலவற்றின் மேல் பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததால், அவற்றில் இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ஒட்டுமொத்தமாக  அழிக்கப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்திட சிதறிய உடலங்களும், இரத்தச் சிதறல்களும், சிதறிய உடமைகளும், தீர்ப்பற்றி எரிந்து கொண்டிக்கும் ஊர்திகளுமாக - அந்த இடம் பெரும் அவலம் நிறைந்ததாகக் காணப்பட்டதை எவ்வாறு மறப்பது.

25-03-2009 அன்று சிறிலங்காவின் வான் மற்றும் தரைப் படையினர் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்தார்கள். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் எங்கும் அன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.  இப்பகுதிகளை நோக்கி அன்று 986 எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகள் ஏவப்பட்ட இப்பகுதியில் ஐந்து தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்திட அன்றைய தாக்குதல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்தார்கள்.

கொல்லப்பட்டவர்களில் இருவர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் செயலகத்தின் பணியாளர்கள். முல்லைத்தீவு அரச செயலக பதிவாளரும் அலுவலகப் பணியாளருமான 52 வயதுடைய மரியநாயகம் டெய்சி ராணி மற்றும் மாவட்ட செயலக உலக உணவுத்திட்ட நிவாரண வழங்கல் பதிவாளரான 27 வயதுடைய பரமேஸ்வரன் ஜெனோஜா ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள். அவர்களுடன் கொல்லப்பட்ட ஏனையோர் விபரங்கள் கிடைக்கவில்லை இதே நாளில் வேவ்வேறு இடங்களிலும் இனப்படுகொலைத் தாக்ககுதல்களை பேரினவாத சிங்கள இனவெறியர்கள் அப்பாவித்தமிழர்களை படுகொலைசெய்தார்கள்.

20-04-2009 திங்கள்; அன்று  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் 'பாதுகாப்பு வலயப்' பகுதிகள் மீது படையினர் அன்று அதிகாலை 2.00 மணி தொடக்கம் தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை தொடங்கினர் அகோர தாக்குதல்: 3,333 தமிழர்கள் காயம் அடைந்தார்கள். வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று 19-04-2009 இரவு இராணுவத்திடம் அகப்பட்ட பல ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் 476 சிறுவர்கள் உட்பட 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தாரகள் மாத்தளன் தொடக்கம் அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரடியாகவே இலக்கு வைத்து ஆட்லெறி பீரங்கிக் குண்டுகள், எறிகணை, கொத்து எறிகணைக் குண்டுகள், பல்குழல் பீரங்கி, குறுந்தூர மற்றும் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகள் மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் அன்று மூர்க்கத்தனமாக நடத்தினர். மக்களை மனிதக் கேடயங்களாக்கி சிங்களப் படையினர் முன்னேறியதால் எதிர்த்தாக்குதல்களை நடத்த முடியாமல் விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.  

தமிழர்கள் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டனர். மிகவும் கொடூரமான மரணங்கள், கற்பழிப்பு மற்றும் இளம், வயதான, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்தனர். முள்ளிவாய்க்காலில் கணவன், மகன்கள், மகள்கள், மனைவிகள் மற்றும் பிற உறவினர்களை இழந்த பலர் தங்கள் உடைமைகளை இழந்தனர். இன்று அந்த மக்கள் நடைபிணங்களாக வாழ்கின்றனர். இடத்திலிருந்து இடத்திற்கு இடம்பெயர்ந்தபோது மக்கள் அவர்களுடன் எடுத்துச் சென்ற உடைமைகள் அனைத்தும் குண்டுவீச்சுக்களில் அழிந்திட பலத்த மழை பெய்ததால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இலங்கை அரசாங்கத்தால் முள்ளிவாய்க்கால் மற்றும் புது மாதலனை இறுதி பாதுகாப்பு வலயங்கள் என அறிவித்த பகுதிகளில் பதுங்கு குழிகளில் இருந்த பொதுமக்களை குறிவைத்து, பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்தனர். இந்த சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கருக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் அடையாளம் தெரியாத மற்றும் எரிக்கப்பட்ட உடல்கள் அதே பதுங்கு குழிகளில் புதைக்கப்பட்டன. முள்ளிவாய்கல் மே 18 அப்பாவிகளின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது, இது பத்து பதின்மூன்றல்ல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மக்கள் இதயத்தில் வடுக்களாக வாழ்துகொண்டிருக்கும்.

 - நிலவன் -


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam