இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மாடு கடத்தலுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

11 Jul 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெலிஓயா ஊடாக திருகோணமலைக்கு, சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவத்துக்கு உதவிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, முள்ளியவளை பொலிஸார்,  கைதுசெய்துள்ளனர். 

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.  இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பியோடியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் ஒத்துழைப்புடன், இருவர் 9ம் திகதி  இரவு, கெப் ரக வாகனமொன்றில் முள்ளியவளை மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து, சட்டவிரோதமான முறையில், 5 மாடுகளைக் கடத்தியுள்ளனர். 

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியின் நாயாற்றுப் பாலத்தை அண்மித்த  பகுதியில் வைத்து, இரவு 11 மணியளவில், குறித்த கெப் ரக வாகனத்தை மறித்துள்ளனர். 

இதன்போது, குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதையடுத்து, வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு, வாகனம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த கடத்தல் சம்பவத்துக்கு உதவிபுரிந்தாரென்ற குற்றச்சாட்டில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கைதுசெய்தனர். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்