இலங்கை செய்திகள்

முன்னாள் போராளியின் தாயை மிரட்டிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்!

01 Dec 2017

ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மாவீரர் நாளன்று  புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியின் தாயாரை பல மணி நேரம் விசாரணை செய்தது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்குடியிருப்பை சேர்ந்த முன்னாள் போராளியான திரு. கனேஸ்வரன் டிலேக்ஷன் (தமிழ்மாறன்)  என்பவர் கணினிப்பிரிவினை சேர்ந்தவர்.  இவர்  2014ம் ஆண்டு பிரான்சில் இருந்து இலங்கை சென்றபோது புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு கடும் சித்திரவதையின் பின் விடுவிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தப்பி வந்து  தற்போது பிரித்தானியாவில் லண்டனில் வசித்து வருகிறார்.

 

கடந்த மாவீரர் நாளன்று (27.11.2017) புதுக்குடியிருப்பில் வசிக்கும் இவரது தாயாரிடம் ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர்  சென்று பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் போராளியின் தாயார் கூறியதாவது..”நான் தமிழகத்தில் இருந்து புதுக்குடியிருப்பு வந்து எனது தம்பியின் வீட்டில் வசித்து வருகிறேன். நான்  புதுக்குடியிருப்பு காவல்நிலையம் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரிடமும் பதிவு செய்து விட்டேன். மேலும் மாவீரர் நாளன்று நான் கோவிலுக்கு செல்ல முற்பட்டபோது எனது தம்பியின் வீட்டுக்கு வந்த சிலர் தாங்கள் TID யினர் எனவும் எனது மகன் மற்றும் மகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கேட்டனர்.

 

நான் அதற்கு சம்மதித்தேன். அப்போது அவர்களில் இருவர் என்னிடம் 2014ஆம் ஆண்டு எனது மகனை கைது செய்த பின்னர் எவ்வாறு அவர் பிரித்தானியா சென்றார் எனவும், தெய்வீகன் மற்றும் கோபி எனும் நபர்களோடு  எனது மகனுக்கு தொடர்பு இருந்ததாகவும் தமிழகத்தில் சென்னையில் கைதான எனது மருமகனைப் தொடர்பு படுத்தியும்  கேட்டனர். ஆனால் எனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது என கூறினேன்.ஆனால் அவர்கள் என்னை தெரிந்தவற்றினை கூறுமாறு மிரட்டினார்கள்.இல்லையெனில் கொழும்புக்கு கூட்டிச்சென்று விசாரிப்போம் என மிரட்டினார்கள்,

உண்மையில் எனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது.எனது மகன்  முன்னாள் போராளியாக  இருந்தது மட்டுமே தெரியும்.அத்தோடு 2014ம் ஆண்டு இலங்கையிலிருந்து எனது மகன் தப்பி பிரித்தானியா செல்ல எந்த இராணுவ அதிகாரி அவருக்கு உதவினார் எனவும் கேட்டனர். எனக்கு இவை தொடர்பில் எதுவும் தெரியாது என அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் திரும்பத்திரும்ப இவற்றினை கேட்டனர். பின்னர் எனது குடும்ப விபரம் மற்றும் எனது மகன் பிரித்தானியாவில் வசிக்கும் விபரம் ஆகியவற்றினையும் சென்னையில் வசிக்கும் எனது மகள் மற்றும் மருமகன் தொடர்பான விபரத்தினையும் கேட்டு எழுதிக்கொண்டு சென்றனர்.” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் புதுக்குடியிருப்பில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு மக்கள் மத்தியில் மீண்டும் முன்னாள் போராளிகள் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV